தொதல் இந்த பேரை கேட்க மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கண்டிப்பாக நினைப்பீர்கள் இது ஒரு ஸ்ரீலங்கா பலகாரம். ஸ்ரீலங்காவில் மிகவும் பிரசித்தி பெற்றது கேரளாவிலும் இதை செய்வார்கள் ப்ளாக் அல்வா என்று கூறுவார்கள். இதற்கு வேண்டிய பொருட்கள் குறைவு, ஆனால் செய்முறை சிறிது நேரம் ஆகும். இறுதியில் கிடைப்பது மிகவும் சுவையான அல்வா. அம்மா செய்யும் பொழுதெல்லாம் எப்பொழுது முடிப்பார்கள், சாப்பிடலாம் என்று ஆர்வத்துடன் காத்திருப்போம். இப்பொழுது நான் செய்யும் போது என் பிள்ளைகளும் அது போல் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அல்வா கிளறும்போது வரும் தேங்காயின் மணம் சுண்டி இழுக்கும். வீடே மணக்கும். சிகப்பு அரிசி அல்லது கருப்பு அரிசியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் இது மிகவும் சத்து நிறைந்தது என்று நான் சொல்வேன், ஏனென்றால் நெய் சேர்ப்பது இல்லை. நெய் சேர்க்காமல் எப்படி அல்வா செய்தேன் என்று நினைக்கிறீர்கள் தானே நெய்யிற்கு பதில் தேங்காயில் இருந்து வரும் எண்ணையே அல்வா பதத்திற்கு கொண்டு வரும். இதை எப்படி செய்வது என்று உங்களுக்கு சொல்கிறேன்.

தேவையான பொருட்கள்:

சிகப்பு அரிசி மாவு – 1 கிண்ணம்

பனை வெல்லம் – 1/2 கிலோ

தேங்காய் பால் – 3 கிண்ணம்

தண்ணீர் – 4 கிண்ணம்

செய்முறை:

சிகப்பு அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து வடித்து மிஷினில் கொடுத்து அரைக்கலாம். இல்லையென்றால் 2 மணி நேரம் ஊற வைத்து வீட்டிலே மிக்ஸ்யில் வெண்ணெய் போல் அரைத்து எடுக்கலாம் .பனை வெல்லத்தில் 1கிண்ணம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து எடுக்கவும். கரைந்தால் மட்டும் போதும், கொதிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

அடி கனமான பாத்திரத்தில் அரிசி மாவு, பனை வெல்லம், தேங்காய் பால், மீதமுள்ள தண்ணீர் கரைத்து கொண்டு அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைத்து கிளறவும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும் அல்வா செய்வதற்கு, பொறுமையாக கிளற வேண்டும். நன்றாக இறுகி தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் வெளியே வரும் நன்றாக எண்ணெய் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு தட்டில் ஊற்றி சமமாக பரத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும். பார்க்க பளபளப்புடன் நன்றாக சுவையுடன் இருக்கும். கண்டிப்பாக செய்து பாருங்கள், சுவைத்த பின் அடிக்கடி செய்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here