தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்துள்ளது. இது கேப்டனாக விராத் கோலிக்கு 50 வது டெஸ்ட் போட்டியாகும்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி, பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. முதல் முறையாக டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். அவர்கள் இந்தப் போட்டியிலும்  தமது சிறப்பான பேட்டிங்-ஐ  தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் புஜாரா, விராத், ரஹானே ஆகியோரும் தமது சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

 பந்து வீச்சில், அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை யும் சாய்த்தனர். ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசினார். அவர்கள் இந்தப் போட்டியிலும் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால், உள்ளூரில் தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும். அதோடு விராத் கோலிக்கு கேப்டனாக, இது 50 வது டெஸ்ட் போட்டி. இதற்கு முன் தோனி, 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல் பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில், டீன் எல்கர், கேப்டன் டுபிளிசிஸ், குயின்டன் டி காக், செனுரன் முத்துசாமி ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். கடந்த போட்டியில் எல்கரும் டி காக்கும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினர். ஆனால் அந்த அணி யின் பந்துவீச்சு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், அதை சரிகட்ட இன்றைய போட்டியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.