பெரும்பாலான இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையொட்டி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேச மாநில அரசு, கர்நாடக அரசிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம் எனவும், உத்தரப் பிரதேச அரசின் செயல்பாட்டை விமர்சித்தும் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடியாக யோகி தனது டுவிட்டர் பக்கத்தில், சித்தராமையாவையும் அவரது அரசையும் விமர்சித்திருந்தார். இதனைத்தொடந்து இருவரிடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளது.

இதனிடையே உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ”கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது பசுவதை தடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சட்டத்தை நீக்கியது. சித்தராமையா ஒரு இந்து என்றால், பசுவதையை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”இந்துக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். எனக்கு தேவைப்பட்டால், நானும் சாப்பிடுவேன். நான் அதனை விரும்பவில்லை என்பதால்தான் சாப்பிடாமல் உள்ளேன். எங்களுக்கு அறிவுரைக் கூறும் முன்பு, பசுவதைக் குறித்து சுவாமி விவேகானந்தர் என்ன கூறியுள்ளார் என்பதைப் படித்துத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here