தேர்வு நடந்த இரண்டரை மணிநேரத்தில் முடிவுகள் வெளியீடு: பெங்களூரு பல்கலைக்கழகம் சாதனை

0
371

பொதுவாக தேர்வு முடிவுகளை தாமதமாக வெளியிடும் பெங்களூரு பல்கலைக்கழகம் திங்கட்கிழமையன்று, இளநிலை கட்டிட
பொறியியல் படிப்பின் ஆறாவது மற்றும் ஏழாவது அரையாண்டு தேர்வு முடிவுகளை இரண்டரை மணிநேரத்தில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரே பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக விஷ்வேஷ்வரைய்யா பொறியியல் கல்லூரி தான். எல்லா பாடங்களின் விடைத்தாள்களையும் தேர்வு நடந்த நாளன்றே திருத்துவதன் மூலம் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளதாக சொல்கிறார் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டுப் பதிவாளரான பேராசிரியர் சி.
சிவராஜு.

”இப்படி செய்வதன் மூலம் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற தேர்வுகளின் விடைத்தாள்களை முழுமையாக திருத்த முடிந்தது. திங்களன்று அன்றைய தினம் நடைபெற்ற விடைத்தாள்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. 139 மாணவர்கள் தேர்வு எழுதினர். குறுகிய காலத்தின் தேர்வு முடிவுகளை வெளியிடுவது பெங்களூரு பல்கலைக்கழக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இல்லையேல் எட்டு முதல் 15 நாட்கள் இடைவெளிக்குப் பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும்,” என்றார் அவர்.

விடைத்தாள்கள் திருத்தும் முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக கூறினார் பொறியியல்
மாணவரான சுரேஷ் பி. “தேர்வு முடிவுகள் விரைவாக வந்தால் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆராய மாணவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். திங்களன்று கடைசி தாளை மதியம் 2 மணிக்கு எழுதினோம். மாலை 4:30 மணிக்கு முடிவுகள் வந்துவிட்டது,” என்றார்.

பெங்களூரு பலகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் விஷ்வேஷ்வரைய்யா பொறியியல் கல்லூரியின் முன்னாள் தலைவருமான வேணுகோபால், தேர்வுத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களை இச்சாதனைக்காக பாராட்டினார். தலைமை காப்பாளர், தேர்வுகள் வாரியத் தலைவர் மற்றும் அக்கல்லூரியின்
கட்டிட பொறியியல் துறைத் தலைவர் ஆகியோரது ஒத்துழைப்பு இல்லாமல் இதனை சாதித்திருக்க முடியாது என பெங்களூரு பல்கலைக்கழகத்தின் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். பிற இளநிலைப் படிப்புகளுக்கும் இதே முறையை பின்பற்றி முடிவுகளை விரைவாக வெளியிடுவோம் என பேராசிரியர் சிவராஜு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here