பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (இன்று) கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்று, மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. முதல் தீர்மானமாக, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 13 ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் அவற்றில் பங்கேற்கவிருக்கிறார்கள். யார் யார், எந்தெந்த மாவட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இரண்டாவதாக, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் மாணவர்கள் மற்றும் தோழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மூன்றாவதாக, உயர் நீதிமன்றம் உருவாக்க எண்ணிய சகஜ நிலைமைக்கு, திட்டமிட்டு குந்தகம் விளைவிக்கும் விதமாக இந்த அரசு ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.” என்றார்.

மேலும், அனைத்து கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய ஸ்டாலின், “தேர்தல் வருகின்றபோது இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.” என்றார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here