தேர்தல் முடிவுகள் ; தாங்களே வெற்றி பெற்றது போல் கொண்டாடிய அர்னாப், நவிகா, ராஜ்தீப் ; ஜால்ரா அடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி

0
316

வாக்கு எண்ணப்பட்ட அன்று (மே23) ஆரம்பம் முதலே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. இதனால்  மோடியின் ஊடக ஊதுகுழல்கள்  தாங்களே வெற்றிகண்டது போல் மகிழ்ச்சியில் திளைத்து போனார்கள். 

பாஜகவின் நலன்விரும்பி  அர்னாப், மோடியின் வெற்றியை தன்னை மறந்து கொண்டாடினார்.சந்தோசத்தில் தன்னையே மறந்து சன்னி தியோலுக்கு பதிலாக, சன்னி லியோன் என மாற்றி அறிவித்தார். 

2019 மக்களவைத்  தேர்தல் முடிவுகளை  தன்னுடைய தனிப்பட்ட வெற்றியாகக் கருதிய அர்னாப் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பார்வையாளர்களிடம், பரபரப்பான 12 மணி நேரம்… இது ஒற்றுமைக்கான வாக்கு, எங்களை பிரிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என கூச்சலிட்டார். 

வாக்கு எண்ணிக்கை நடந்த நாளை ‘சூப்பர் வியாழன்’ என பெயரிட்டுக் கொண்டது  சி.என்.என். நியூஸ் 18.  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரத் தொடங்கியதும் ரிபப்ளிக் டிவியின் தொகுப்பாளர் ‘மோடி அலை’ என்றும் இந்தியா டுடே தொகுப்பாளர்கள் ‘மோடி புயல்’, ‘மோடி சுனாமி’ என்றார்கள். சி.என்.என். நியூஸ் 18 ‘சூறாவளி’ என்றது.

சி.என்.என். நியூஸ் 18 செய்தி தொகுப்பாளர் பூபேந்திர சவுபே, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அரை மணிநேரத்தில், நம்ப முடியாத வகையில் மோடி பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகிறது இதனால் உலக சாதனையை அவர் படைப்பார் எனவும்  பேசினார்.

இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், ஏதோ கொண்டாட்டத்துக்குச் செல்வது போல உடையணிந்து செய்திகளை  வழங்கினார். ஆரம்பத்திலேயே  பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என சொன்னார். பிரதமர் அலுவலகத்திலிருந்து  ’சீஸ் கேக்’-ஐ எதிர்ப்பார்ப்பதாக ராஜ்தீப் சொல்ல, அவருடன் தொகுப்பாளராக அமர்ந்திருந்த ராகுல் கன்வால், தனக்கு ‘டோக்ளா’ வரும் என கூறினார். 

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, இவர்களைப் பார்த்து, நீங்கள் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடாது  என சொன்னார். ஆனால், அவர்கள் அதைக் காது கொடுத்து கேட்கவில்லை. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ராகுல் ஷிவ் சங்கர், பதட்டமாகத்தான் இருந்தார். ஆனால், நாவிகா குமார் முகத்தில் முழுநாளும் சிரிப்பு இருந்தது .   மோடியை கடந்த ஐந்தாண்டுகளாக விமர்சித்து வந்த என்.டீ.டி.வி. இந்தியாவின் ரவிஷ் குமாரும் சிரிக்க மறக்கவில்லை.

என்.டீ.டி.வி. 24*7 -இல் பிரணாய் ராய் தலைமையிலான குழு, நாடு முழுவதும் பயணித்ததில் இத்தகைய முடிவை எதிர்பார்க்கவில்லை என சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஏ.பி.பி. நியூஸிஸ், தொண்டை வறண்டு போகும் வரை செய்தி தொகுப்பாளர்கள்  கத்திக்கொண்டே இருந்தார்கள்.  பாஜக கூட்டணி ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த நிலையில், பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தலைகால் புரியவில்லை. கருத்து சொல்ல வந்தவர்களை பேசவிடாமல் தாங்களே அனைத்தையும் கூறி முடித்தனர். அஜய் போஸ் சொல்ல வந்ததை சொல்லவிடாமல், சி.என்.என். நியூஸ் 18 தொகுப்பாளர் பூபேந்திரா சவுபே, இது மோடி அலை. இதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்…வெற்றியை வெற்றி என சொல்லுங்கள் என்றார்.

இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், நீங்கள் இந்த அலையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு  கட்டளையிட்டார்.  காங்கிரஸ் தலைவர்களில் அபிஷேக் மனு சிங்வி மட்டும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துக் கொண்டார் . 

டைம்ஸ் நவ்-இன் நவிகா குமார், தேசீன் பூனாவாலாவியிடம் வெளிப்படையாகவே கோபப்பட்டார். மோடி சிறுபான்மையினர் அதிகமுள்ள 20 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், அவரை பிரிவினையாளர் என சொல்வீர்கள்? என்றார் நவிகா.

ஏ.பி.பி. நியூஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை  ‘பப்பு, 56 இன்ச் மார்பு கொண்டவரிடம் தோற்றார்’ என செய்தி வெளியிட்டது.

பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிடம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும்படி மிரட்டினார் நவிகா,காங்கிரசின் தலைமை மாற்றப்பட வேண்டுமா? என்றார்.  அதற்கு அமரீந்தர் தேவையில்லை என்றார். 

ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, உத்தர பிரதேச மக்கள் வத்ரா குடும்பத்தை மாநிலத்திலிருந்து வெளியே அனுப்ப நினைப்பதாகச் சொன்னார். பின்னர், சமீபகால பழக்கமாக இவரிடமிருந்து வெளிப்படும், தூண்டிவிடும் அறைகூவலை விடுத்தார். வாக்கு எந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுக்கு அர்னாப் கத்துவதைப்  பாருங்கள்…

கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரை விட செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் மோடியின் வெற்றியைக் கொண்டாடினர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில், அனைத்து தொலைக்காட்சிகளும் மோடி அமோக வெற்றி பெறுவார் என்று கூறின.  ஏ.பி.பி. மற்றும் நியூஸ் எக்ஸ் இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணி 260 இடங்களைப் பெறும் என்று கூறின. மற்ற அனைவரும் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பெறும் என்றனர்.

வரவிருக்கும் நாட்களில் மோடிக்கு ஜால்ரா அடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் விதமாகத்தான், தேர்தல் முடிவுகள் வெளியான அன்று அர்னாப் கோஸ்வாமி, நவிகா, ராஜ்தீப் சர்தேசாய் , மற்றும் பல செய்தி தொகுப்பாளர்களின்  நடத்தை இருந்தது.

theprint

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here