மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

உலகின் மிக பிரபலமான சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. ஆனால் பல்வேறு சமயங்களில் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சில பொதுவான விஷயங்களில் அதன் நிலைப்பாடுகள் பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பேஸ்புக் வழியாக, திட்டமிட்டு ஒருங்கிணைந்த விஷமச் செயல்களில் ஈடுபடும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.   

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவோடு தொடர்புடைய தனி நபர்கள் நிர்வகித்து வந்த 687 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்த  போலி கணக்குகளைப் பயன்படுத்தி திட்டமிட்டு ஒருங்கிணைந்த விஷமச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலிக் கணக்குகள் மூலம் பல்வேறு குழுக்களில் இணைந்து அங்கு தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் தங்கள் பக்கங்களுக்கு ஆட்களை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் பெரும்பாலும் உள்ளூர் செய்திகள், அரசியல் செய்திகள், குறிப்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்திகள், வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சியின் பார்வைகள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக மீதான விமர்சனங்கள் ஆகியவற்றைத்தான் பகிர்ந்துள்ளார்கள்.

அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க முயன்றாலும், எங்ககளது ஆய்வின் மூலம் அவரகள் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவோடு தொடர்புடைய வர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here