மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் நல்ல ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் (ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் பணியாளர்கள்) வெளிநாடுகளில் போராடிவருகின்றனர். 

இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடியே 50 லட்சம் பேர் இம்மாதிரியாக இணையம் வழியாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் பணிபுரிந்துவருகின்றனர். வெளிநாட்டு தொழிலாளர்கள் போல், இவர்களும் தற்போது தங்களின் உரிமைகளை கேட்டு போர் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். செயலி நிறுவனங்கள் மட்டும் இன்றி, மத்திய அரசை நோக்கியும் இவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

இதுகுறித்து தெலங்கானா இணைய நிறுவனங்களின் தற்காலிக பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷேக் சலாவுதீன் கூறுகையில், “ஒரே அழைப்பின் மூலம், ஆயிரக்கணக்கான ஓட்டுநர் மற்றும் டெலிவரி பணி செய்யும் தொழிலாளர்களை எங்களால் தெருக்களில் திரட்டி விட முடியும். தற்போது, நடைபெறுவது போல் லட்சக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டால், இது தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.

ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்கள், ஒரு வாக்கு வங்கியாக மாறி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி தெருக்களில் இறங்கி போராட்டத்தை நடத்தும் பட்சத்தில் அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மோடி அறிந்திருக்கிறார்.

இருப்பினும், 2020ஆம் ஆண்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டிவருகிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம், இம்மாதிரியான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், சுகாதாரம் உள்பட சமூக பாதுகாப்பு பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற போராட்டங்கள் நடைபெறுவதை மோடி தவிர்க்கவே விரும்புவார். புதிய சட்டத்தில் பணியாளர்களை பணியிலிருந்து எளிதாக நீக்கும் அமசங்கள் இடம்பெறுவதையும் மோடி விரும்பமாட்டார். 

கடந்த 2020ஆம் ஆண்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று வேளாண் திருத்த சட்டங்கள் திரும்பபெறக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஓராண்டாக தில்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்திவந்தனர். இதன் காரணமாக, சர்ச்சைக்குரிய சட்டங்களை மோடி அரசு திரும்பபெற நேர்ந்தது. இதுபோன்ற சூழல் மீண்டும் நடைபெறுவதற்கு, இந்த புதிய சட்ட அம்சங்கள் வழிவகுக்க வாய்ப்புள்ளது.

வரும் காலங்களில், 9 கோடி வேலைவாப்புகளை உருவாக்கும் திறனை இந்த இணைய பொருளாதாரம் கொண்டுள்ளது என பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளை கடந்த மாரச் மாதம் அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம், 250 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக பண பரிவர்த்தனை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Courtesy: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here