மத்திய அரசு, தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டது. கஸ்தூரி ரங்கன் குழுவின் இந்த வரைவு அறிக்கையில் நாடு முழுவதிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினரும் புதிய கல்வி கொள்கை இந்தி திணிப்பு என்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தும் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி அம்சங்களுக்கு வேட்டு வைக்க கூடியது என எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்த கல்விக் கொள்கையானது, ஆங்கிலம், இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து www.tnscert.orgஎன்ற தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தது. இந்த நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. கல்விக் கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்துகொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கோரியிருந்தனர். இந்நிலையில் இந்த வரைவு கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here