தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை நிராகரிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரியை தவறாக அளிக்க வேண்டும்; மோடி கூறுவது அனைத்தும் பொய் – விளாசும் அருந்ததி ராய்

0
376

மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆர்சி) தரவுத் தளமாகச் செயல்படும். எனவே, இது தொடர்பான தகவல் சேகரிக்க வரும் அலுவலர்களிடம் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை நிராகரிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரியை தவறாக அளிக்க வேண்டும் என்று நூலாசிரியரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். .

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. மேலும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ‘என்பிஆர் மற்றும் என்ஆர்சி இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை. இவற்றின் தரவுத் தளங்களில் ஒன்றை மற்றொன்று பயன்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் வசித்து வருபவர்களின் பட்டியல்தான் என்பிஆர் . குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வசிப்பவராகவும், அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து வசிக்கப் போகும் நபராகவும் இருப்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தரவுகள் 2010-ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்டது. இந்த தரவுகள் வீடுவீடாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு மூலம் 2015-இல் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தில்லி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான நடவடிக்கைக்கான கூட்டுக் குழு’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததி ராய் பங்கேற்றுப் பேசியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குறிவைத்து செயல்படுத்தப்படவுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு வந்து பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண்கள், இதர விவரங்களைக் கோருவார்கள். மேலும், ஆதார் எண், வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களையும் கேட்பார்கள். என்பிஆர் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆர்சி) தரவுத் தளமாக செயல்படும் . ஆகவே, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை நிராகரிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரியை தவறாக அளிக்க வேண்டும். முகவரியைக் கூறுமாறு கேட்டால் 7 ஆர்சிஆர் என்று கூற வேண்டும். நாம் தடியையையும், தோட்டாக்களையும் எதிர்கொள்ள பிறக்கவில்லை.

 ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பேசுகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தமது அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும், நாட்டில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் கூறியிருப்பது பொய். தெரிந்தே இதுபோன்ற பொய்களை அவர் கூறி வருகிறார். கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் அவர் பக்கம் இருப்பதன் காரணமாக இதுபோன்று பொய் கூறி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடுபடுவர்கள், இவற்றின் செயல்பாடுகளைத் தடுக்க பல்வேறு மாநில மக்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாட்டில் பரவலாகப் போராட்டங்கள் நிகழ்ந்த பிறகு, மத்திய அரசானது என்ஆர்சி, சிஏஏவின் ஷரத்துகளை என்பிஆர் மூலம் திணிக்க முயற்சி செய்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் போலீஸாரால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று பொருள்களைக் கொள்ளையிட்டும், அடித்து நொறுக்கியும் வருகின்றனர். சிஏஏ, என்ஆர்சி ஆகியவை முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, நாட்டில் உள்ள தலித்துகள், பழங்குடியினர், ஏழை மக்களுக்கும் எதிரானதாகும் என்றார் அருந்ததி ராய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here