தேசிய புலனாய்வு முகமை(NIA)க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா தாக்கல்

0
346

எதிர்க்கட்சிகளின் விமர்சனம், எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேசிய புலனாய்வு முகமை  (National Investigation Agency)க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 

நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய உளவுத்தகவல்களை கண்காணித்து அவர்களை கைது செய்வது ஆகிய பணிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

குறிப்பு: மாலேகான் குண்டுவெடிப்பில்  முக்கிய குற்றவாளி பிரக்யா தாக்கூர் சம்பந்தப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமைதான்  நீர்த்து போக செய்கிறது 

இந்த முகமைக்கு அதிகமான அதிகாரங்களை அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது  கடும் விவாதம் நடந்தது. இந்த அதிகாரங்களின் மூலம் எதிர்க்கட்சியினர் மிரட்டப்படலாம் என சில கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

என்.ஐ.ஏ.திருத்த மசோதா 2019 தவறாக பயன்படுத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதென்றும், இதனால் குறிப்பிட்ட சில மதத்தவர் மட்டுமே பாதிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். இதனை அமித் ஷா மறுத்தார். 

மதங்களின் அடிப்படையில் பாரபட்சம் பார்க்கப்படுவதில்லை என்று கூறிய அவர், தீவிரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறினார். 

மேலும் அவர் பேசுகையில், ‘பொடா எனப்படும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்பு சட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு நீக்கியது. ஏனென்றால் வாக்கு வங்கி அக்கட்சிக்கு முக்கியம் என்பதால் இதனை செய்தது.

காங்கிரஸ் அரசு பொடா சட்டத்தை நீக்கியதை தொடர்ந்துதான் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த என்.ஐ.ஏ. திருத்த மசோதாவுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார். 

இதனை விமர்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசியல் பழிவாங்கும் சம்பவங்களுக்காக இந்த மசோதா பயன்படுத்தப்படும் என்று கூறினர். 

இந்த திருத்த மசோதா மூலம் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் வழக்குகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here