தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா?

0
566

“அதிகாரம் தவறிழைக்க செய்யும். முழுமையான அதிகாரம் அதிக தவறிழக்க செய்யும்” என்றார் ஆங்கிலேயரான பரோன் ஜான் ஆக்டன்.

தேசிய புலனாய்வு நிறுவன திருத்த மசோதா 2019-க்கு எதிரான கருத்துடையோர் பரோன் ஜான் ஆக்டனின் இந்த மேற்கோளை கூறி, இந்த நிறுவனத்திற்கு கூடுதலாக அதிகாரம் வழங்குவது தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியத்தை உருவாக்கும் என்கின்றனர்.

பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும்.

திங்கள்கிழமை மக்களவையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, இதற்கு எதிராக ஆறு பேர்தான் வாக்களித்தனர்.

புதன்கிழமை மாநிலங்களவையில் நிகழ்ந்த வாக்கெடுப்பில் எந்தவொரு உறுப்பினரின் எதிர்ப்பும் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை தடுக்கும் மத்திய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானதாக இருக்கும் என்று இந்த மசோதாவை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சி தங்களின் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சுவதால், இந்தியாவை ஒரு போலீஸ் நாடாக இது மாற்றிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். அரசியல் நோக்கங்களுக்காக இந்த நிறுவனம் தவறாக பயன்படுத்தப்படும் வாயப்புக்கள் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னிலை குற்றவியல் வழக்கறிஞருமான மஜீத் மேனன் இது பற்றி தெரிவிக்கையில், தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு ஏற்கெனவே அதிக அதிகாரங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 180 நாட்கள் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராக்காமல், விசாரிக்கும் அதிகாரம் இதற்கு இருக்கிறது. மாநில புலனாய்வு நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக பணிபுரிய இதற்கு அதிகாரங்கள் உள்ளன.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்ப்பதாக பிபிசியிடம் கூறிய மேனன், புதன்கிழமை இதற்கு வாக்கெடுப்பு நடைபெற்ற, எதிராக வாக்களிக்கவில்லை என்றார்.

அதிக அதிகாரமுள்ள இந்த நிறுவனத்தை தவறாக பயன்படுத்தும் எந்த நோக்கமும் மோதியின் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறி எதிர்ப்போரின் அச்ச உணர்வுகளை தணிக்க உள்துறை அமைச்சா அமித் ஷா முயன்றார்.

நீதிமன்றத்திற்கு அனுப்பிய 90 சதவீத வழக்குகளுக்கு தேசிய புலனாய்வு நிறுவனம் தண்டனை வாங்கி கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர்.

மும்பையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். பெரும் கோபத்தை ஏற்படுத்திய இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற அடுத்த மாதம் 2008ம் ஆண்டு தேசிய புலனாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது.

இதனை தோற்றுவித்த பின்னர், மொத்தம் 244 வழக்குகளை புலனாய்வு செய்துள்ளது. இதில் 37 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், இதற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.

அரசியல் சாசன நிபுணரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சூரத் சிங் இது பற்றி தெரிவிக்கையில், “தீவிரவாதத்தை தடுப்பதற்கு ஒரு வலுவான மத்திய விசாரணை நிறுவனத்தின் தேவை, “தேசிய புலனாய்வு நிறுவனத்தை” உருவாக்கியது மூலம் நிறைவேறியுள்ளது” என்று கூறுகிறார்.

“என்னை பொறுத்தவரை, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது இந்தியாவை போலீஸ் நாடாக மாற்றிவிடும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கருத்து. ஆனால், இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஆபத்து உண்மையாகவே உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

மக்களவையில் அமித் ஷா ஆற்றிய உரையில், இந்த மசோதாவை எதிர்த்தால், தீவிரவாதிகளையும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளையும் ஊக்கமூட்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

இந்த மசோதா பற்றி விமர்சிக்க பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டியதை அமித் ஷாவின் விளக்குகிறது.

அமித் ஷாவுக்கும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால், வாக்களிக்கும்போது ஆறு மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது இரண்டு வழிகளில் நிகழலாம் என்கிறார் மக்களை உறுப்பினர் மஜீத் மேனன்.

முதலாவதாக, மத்திய புலனாய்வு துறையும், அமலாக்க துறையும் அவற்றின் நோக்கங்களை தவறாக பயன்படுத்தியதாக சொல்லப்படுவதுபோல எதிரிகளை கண்காணிக்க ஆளும் அரசு இதனை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, தீவிரவாதத்தை தடுக்கிறோம் என்ற பெயரில் குற்றமறியாத மக்களை இலக்கு வைக்க இந்த நிறுவனம் எண்ணலாம்.

“தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட டஜன்கணக்கானோர் குற்றமற்றவர்களாக இருந்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தும், பிறரும், அதனை செய்ததற்கு சரியான சான்றுகள் இல்லை என்று கூறி தேசிய புலனாய்வு நிறுவன நீதிமன்றமே கடந்த ஆண்டு அவர்களை விடுதலை செய்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய புனாய்வு துறையை “கூண்டில் அடைக்கப்பட்ட கிளி” என்று இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

பல உயரிய வழக்குகளில் அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றியதாக தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது.

பிரபலமற்ற மாலேகான் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்குகளில், சில வலதுசாரி இந்து நிறுவனங்களை சேர்ந்த குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிறுவனம் சுதந்திரத்தோடு செயல்படும் தன்மை கேள்விக்குள்ளாகியது.

கடந்த ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், தேசிய புலனாய்வு நிறுவனத்தை உருவாக்கிய கருத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக தற்போதைய நிலை உள்ளது என்று கூறினார்.

“2008ம் ஆண்டு இறுதியில் தேசிய புலனாய்வு நிறுவனத்தை நாங்கள் உருவாக்கியபோது, ஸ்காட்லாந்து யாடு மற்றும் அமெரிக்க பெடரல் புலனாய்வு துறையை போல விளங்கும் என்று கற்பனை செய்திருந்தேன். இன்று தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கும், நாட்டின் காவல்துறை குற்றவியல் கிளைகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு நிறுவனத்தின் சாதனைகள் கலவையாக உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை தாக்குதல்கள் நடைபெற போவதாக இலங்கை அதிகாகரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தது போன்ற சில பெரும் சாதனைகளை இது செய்திருக்கிறது. நாட்டில் நிகழ இருந்த இஸ்லாமிய அரசு என்ற குழுவை போன்ற தாக்குதல் பலவற்றை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

50 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தற்காலை தாக்குதல் பற்றி தற்போது இது புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக மஜீத் மேனன் தெரிவிக்கிறார்.

இந்த புலனாய்வில் மேற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி தெரிவிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமீபத்தில் அவர் கேட்டுள்ளார்.

ஆனால், இன்னும் புலனாய்வு நடைபெற்று வருவதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக மேனன் கூறியுள்ளார்.

பயங்கரவாத்த்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாமிடம் பெறுவதாக 2017 ஆண்டு அறிக்கையில் அமெரிக்க உள்துறை கூறியுள்ளது. “பயங்கரவாதம் பற்றிய நாடுகளின் அறிக்கை” என்ற தலைப்பிலான இதில், 2016ம் ஆண்டு, இராக் 2,965 பயங்கரவாத நிகழ்வுகளையும், ஆப்கானிஸ்தான் 1,340 நிகழ்வுகளையும், இந்தியா 926 நிகழ்வுகளையும் கண்டுள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.

இவற்றில் பல காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்தவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவை மத்திய புலனாய்வு நிறுவனத்தின் மோசமான நிலைமையையே பிரதிபலிக்கிறது.

தடா (TADA) மற்றும் போடா (POTA) போன்ற சிறப்பு தீவிரவாத தடுப்பு சட்டங்களை இந்தியா கொண்டிருந்ததாக சூரத் சிங் கூறுகிறார். ஆனால், அவற்றை கொண்டு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை.

அதிகாரிகள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

போடா சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நீதிமன்றம் படிப்படியாக அனைவரையும் விடுதலை செய்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக விமர்சனம் எழுந்த பின்னர் தடாவும், போடாவும் காலக்கொடு முடிந்தவையாகிவிட்டன.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here