‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ 

பாரதியின் இந்த எழுச்சி வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு இந்த சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்டு அதை ஊருக்கு உரக்கச் சொல்லும் தைரியம் படைத்த அனைவருமே சுதந்திர உணர்வு மிக்க பத்திரிகையாளர்களே! என்பதில் எவருக்கேனும் ஐயமுண்டோ?!

இன்று தேசிய பத்திரிகையாளர் தினம்!

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான இன்றைய நாள் இந்தியா முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்தில்;

‘சுதந்திரமாக இயங்கும் பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். அனைத்து வகையான பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 125 கோடி இந்தியர்களின் திறன்கள், பலங்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்த நமது ஊடகங்கள் மேலும் மேலும் பயன்படுத்தப்படட்டும்.’

– எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;

‘ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் அச்சு மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கெளரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர், 16ம் தேதி, தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துகள். பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம் உட்பட, பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு செயல்படுத்தி வரும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த செய்திகளை, மக்களிடம் எடுத்து செல்லும் பணியை செய்து வரும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு, தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்.

– எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பத்திரிகையாளர் தினம் என்பது ஊடக சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான தைரியத்துடன் இயங்கும் இதழியல் துறையின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படை நோக்கம், உலகெங்கும் எச்சூழலிலும் அச்சமின்றிச் சென்று செய்திகளையும், புகைப்படங்களையும் சேகரித்து வந்து நாட்டு மக்களுக்கு அறியத் தரும் பத்திரிகையாள நண்பர்களின் பணியை கெளரவித்தலே!

ஊடகத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். பத்திரிகையாளர்கள் என்பவர்கள் சமுதாயத்தின் கண்ணாடி போன்றவர்கள். சமூகம் என்ன நினைக்கிறது என்பதை அதன் எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, ஆதங்கங்களை, ஏமாற்றங்களை, வலிகளை, துயரங்களை, அறச்சீற்றங்களை மிகச்சரியாகப் பதிவு செய்ய ஊடகமே இன்றளவும் உதவுகிறது. காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் பெருகி எதை நம்புவது? எதை விடுப்பது என்ற குழப்பம் மக்களிடையே நீடித்தாலும் கூட எந்தப் பத்திரிகை தனது தனித்தன்மையால் மக்களிடையே நம்பகத்தன்மை பெற்று நிற்கிறதோ அதன் தலையங்கத்தில் பிரதிபலிக்கிறது பத்திரிகைச் சுதந்திரத்தின் எழுச்சி மிக்க வெற்றி. அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளில் குறை இருப்பின் அயராது தட்டிக் கேட்கத் தவறாத ஊடகங்கள் இன்றும் இருக்கின்றன. அதை அதன் வாசகர்கள் நன்கறிவார்கள். அப்படிப்பட்ட அசலான பத்திரிகைகளின் உழைப்பை கெளரவிக்கும் தினம் இது.

இந்த நாள், பத்திரிகை சுதந்திரத்தையும்.. சமூகத்தின் மீதான பத்திரிகைகளின் பொறுப்புகளையும் உணர்த்தும் முக்கியமான நாள். இந்திய பத்திரிகை கவுன்சில் இந்த நாளில் இருந்து தான் தனது செயல்பாட்டை முழுவேகத்துடன் தொடங்கியது. இன்று, உலகில் சுமார் 50 நாடுகளில் பத்திரிகை கவுன்சில் அல்லது ஊடக கவுன்சில் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையில் அரசு எந்திரத்தின் மீது கூட அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு தன்னாட்சி அமைப்பு இந்திய பத்திரிகை கவுன்சில்.

1996 ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் தேசிய  பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டாலும் கூட பல சந்தர்பங்களில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அரசு மற்றும் அதிகார மையங்களின் செயல்பாட்டை எதிர்க்கும் பத்திரிகைகள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு அவற்றின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதும் உலகம் முழுவதுமாகப் பரவலாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. யுனெஸ்கோ வெளியிட்ட தகவலின் படி சர்வதேச அளவில் ஒவ்வொரு 5 நாள் இடைவெளியில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பத்திரிகையாளர் அல்லது ஊடகவியலாளர் கொலையுண்டு கொண்டே தான் இருக்கிறார். இந்த நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

இதில் அதிகமும் பாதிக்கப்படுபவர்கள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் என்று சொல்லப்படக்கூடிய புலனாய்வு இதழியல் பத்திரிகையாளர்களே! பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியப் பத்திரிகைகள் போதுமான கருத்துச் சுதந்திரத்துடன் செயல்படுகின்றன என்கிறது ஒரு சர்வே. ஆனால், உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் வலுவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 வது இடத்திலேயே இப்போதும் இருந்து வருகிறது. உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 196. அதில் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டு பத்திரிகை சுதந்திரம் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூடிய நாடுகளாக இருப்பவை வெறும் 50.

பத்திரிகை சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு நார்வே.

கடைசி இடத்தில் இருக்கும் நாடு வடகொரியா. என்கிறது அந்த சர்வே!

சரி இப்போது தலைப்புக்கு வரலாம்.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த அளவுக்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்றால்;

இன்றும் கூட உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் பத்திரிகை அலுவலகங்கள் மீது கல்லெறிதல் நடத்தத் தயங்காத அதிகார மையங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. தம்முடன் உடன்படாத கொள்கைகளைக் கொண்ட பத்திரிகைகள் மீது பொய் வழக்குகள் போட்டு முடக்கி வைக்கத் துடிக்கும் சர்வாதிகாரப்போக்கு இன்றளவும் கண்கூடாகக் காணக்கிடைக்கும் காட்சிகளே! பத்திரிகை சுதந்திரம் என்பதை எப்போதும் தங்களது சுய லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் அத்தனை விதமான ஆதிக்க சக்திகளும் இன்றும் உண்டு. சற்று அதீதமாகவே உண்டு. அவர்களிடையே எவ்வித சமரசமும் இன்றி தங்களது சுதந்திரத்தை இழக்காமல் ஊடக தர்மத்தை நிலைநிறுத்தும் பத்திரிகைகள் நம்மிடையே இல்லாமலில்லை. அதன் அச்சமற்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்த நாள் உரித்தாகட்டும்!

வாழ்க பத்திரிகை சுதந்திரம்!

Courtesy : dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here