தேசியகீதம் : தேசபக்தி எனும் வன்முறை

1
1107

அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என கடந்த நவ.30 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் நாராயண் சௌக்சி என்பவர் தனது மனுவில் அரசு விழாக்கள் மற்றும் திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதற்கான சரியான நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அப்போது தேசியக்கொடி திரையில் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. இப்படி இசைக்கும்போது பொதுமக்கள் வருவதும் போவதுமாக இல்லாதபடி அரங்கக் கதவுகளை எல்லாம் அடைத்துவிட வேண்டும், பாடலை எடிட் செய்யாமல் முழுமையாக ஒளிபரப்பவேண்டும், என்றெல்லாம் கூட அறிவுறுத்தியுள்ளது. பத்துநாள் அவகாசத்தில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியதை மத்திய அரசு மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டது.

1960களில் (இந்திய – சீனப் போர் சமயம்) திரைப்படம் முடிந்தபின் தேசியகீதம் இசைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் படம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் மனநிலையில் இருந்த மக்களிடம் இதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே சைக்கிளை எடுக்கவும், பேருந்தைப் பிடிக்கவுமாக மக்கள் கலைந்துகொண்டே இருந்ததால் 1975 முதல் இவ்வழக்கம் நிறுத்தப்பட்டது.

இன்று மீண்டும் அதே வழமை தூசுதட்டப்படுவதாக இதை எளிமைப்படுத்திவிட முடியாது. இரு நூற்றாண்டுகளுக்கு இடையில் உள்ள ஒரு பாரிய அரசியல் வேறுபாட்டை நாம் கவனிக்கவேண்டும். அதாவது, சென்ற நூற்றாண்டுக் குடிமக்கள் மீதெல்லாம் சுமத்தப்படாத ஒரு வன்முறை இன்று நம் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்பட்டிருக்கிறது.. அதுதான் ‘தேசபக்தி’. 1960களைப்போல அல்லாமல் தேசியகீதத்தின்போது இங்கும் அங்குமாக அலைந்தால் நாம் தேசப்பற்றாளர்கள் இல்லை என்று மட்டுமல்ல ’தேசத்துரோகிகள்’ என்றும் அடையாளம் காணப்படுவோம்.

தேசியகீதத்திற்கு எழுந்து நிற்காமல் இருப்பது தேசத்துரோகம் என்றோ தண்டனைக்குரிய குற்றம் என்றோ நமது சட்டத்தில் வரையறை எதுவும் இல்லை. தேசியச்சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின்படி (1971) தேசியகீதம் பாடப்படும்போது அதை வேண்டுமென்றே தடுப்பவர்கள் அல்லது பாடவிடாமல் தொல்லை கொடுப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை (அ) அபராதம் (அ) இரண்டையுமே அளிக்கலாம். மற்றபடி தேசியகீதத்திற்கு எழுந்து நின்று மதிப்பளிக்க வேண்டும் என்பதுபோன்ற விதிகள் எதுவும் இல்லை. நீதிபதிகளின் பணி அரசியல் சட்டத்தைப் பின்பற்றி மக்களுக்கு நீதியை (அ) தீர்ப்பை வழங்குவதுதானேயொழிய இப்படி அரசுக்கும் மக்களுக்கும் தன் மனம்போன போக்கில் உத்தரவிடுவது அல்ல..

சரி, இதெல்லாம் இருக்கட்டும். ஒரு தேசியகீதத்திற்காக கொஞ்சநேரம் நின்றுவிட்டுப் போவதில் அப்படி என்ன கால் வலிக்கப்போகிறது என்று பிரச்சினையைச் சுருக்கிப் பார்ப்பவர்களுக்காக 80களில் தேசியகீதம் தொடர்பாக நீதிமன்றம் வரை சென்ற வழக்கொன்றின் விவரம் இதோ :
கேரளப் பள்ளிக்கூடம் ஒன்றில் வழிபாட்டுக்கூட்டத்தின்போது தேசியகீதம் பாடமறுத்த ’குற்றத்திற்காக’ மூன்று குழந்தைகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். அவர்கள் மூவரும் யஹோவா பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை யஹோவாவைத் தவிர வேறு ஒருவரை வழிபடுவதோ வேறெந்த வழிபாட்டுப் பாடல்களைப் பாடுவதோ மத நம்பிக்கைக்கு எதிரானது. எனவே, ‘ஜன கண மண’ பாடலை உச்சரிக்க மறுத்து, அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைதியாக மட்டும் நின்றார்கள். ஆனால் உச்சரிக்காத குற்றத்தைச் சொல்லி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. உயர்நீதி மன்றமும் அதை வழிமொழிந்தது. இதை எதிர்த்துக் குழந்தைகளின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இப்படியொரு புகழ்பெற்ற தீர்ப்பை அளித்தார்கள் : அரசியல்சட்டம் 25(1) பிரிவின் படி யாரொருவரும் தனது மதநம்பிக்கைகளைக் கடைபிடிக்கவும் வெளிப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை இருக்கிறது. அந்தக் குழந்தைகளைப் பள்ளி நிர்வாகம் மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு முறையான கல்வி அளிக்கவேண்டும்.

இப்படித்தான் இந்தியா என்பது பல்வேறு நம்பிக்கை சார்ந்த, கலாச்சாரங்கள் சார்ந்த மக்களின் தொகுதியாக இருக்கிறது. ஒரே தேசத்தில் வாழ்கிறோம் என்பதால் ஒற்றைத் தேசியப்பண்பு என எதுவும் இங்கு சாத்தியமில்லை. மாட்டை ஒரு தெய்வமாகப் பார்ப்பதோ அல்லது உணவாகப் பார்ப்பதோ அவரவர் பண்பாடு சார்ந்தது. இதில் ஒருவர் பண்பாட்டை மற்றொருவர் மேல் திணிப்பது எப்படி? மாட்டுக்கறி உணவிற்காக வீடு புகுந்து தாக்கும் ஒரு தேசத்தின் மீது ஒரு முஸ்லிமிற்கோ (அ) தலித்திற்கோ எப்படி ‘பக்தி’ உண்டாகும்? ‘தேசியம் ஒரு கற்பிதம்’ ‘தேசபக்தி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றெல்லாம் அரசியல் பாடம் படித்தவர்களுக்கு இனி இத்தேசம் எங்கு இடம் அளிக்கும்? உச்சரிக்க மட்டுமல்ல எனக்கு எழுந்து நிற்கவும் விருப்பம் இல்லை எனச் சொல்பவர்களுக்கு நேரவிருக்கும் கதி என்ன? யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. அதற்கும் ஒரு வழக்கு இருக்கிறது. அதே கேரளாவில் 2014இல் நடந்த சல்மான் முகம்மதின் (படத்திலிருப்பவர்) பிரச்சினைதான் அது.

சல்மான் தனது ஐந்து நண்பர்களோடு சேர்ந்து ஒரு திரையரங்கத்திற்குச் செல்கிறார். படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் ஒளிபரப்பப்படுகிறது. எல்லோரும் எழுந்து நிற்க அவரும் அவர் நண்பர்களும் உட்கார்ந்தபடி இருக்கிறார்கள். இது அவர்களின் வழக்கமும் கூட. அன்று சுற்றி இருக்கும் ‘தேசபக்தர்கள்’ முறைத்துப் பார்க்க வாய்ச்சண்டை, கைச்சண்டையாகி ஒருவழியாய் படம் முடிந்து வீடு திரும்புகிறார்கள். அன்று நள்ளிரவு சல்மானின் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அவரிடமோ அவர் பெற்றோரிடமோ எந்தக் காரணமும் சொல்லாமல் அவரைக் கைது செய்து அழைத்துச்செல்கிறார்கள். தேசியகீதத்தை அவமதித்ததாகச் சொல்லி அவர்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்துகிறார்கள். அவர் ஒரு ‘முஸ்லிமாக’ இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். 35 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, இரண்டு லட்சம் பணத்தைக்கட்டி, தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்து, வாரத்தில் இருமுறை வந்து விசாரணை அதிகாரியின் முன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பிணையைப் பெறுகிறார்.

தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்காமல் கூச்சலிட்டதோடு, முகநூலில் சுதந்திரதினத்தை அவமதித்து எழுதிய ஒரு தேசவிரோதியாக சித்தரிக்கப்பட்ட அவரை Shoba Warrier (Rediff.com) ஒரு நேர்காணல் செய்கிறார். கம்யூனிசம், பகுத்தறிவுவாதம், பின்நவீனத்துவம் என பரந்துபட்ட ஒரு அரசியல் புரிதலோடு உரையாடும் அந்த 25 வயது இளைஞனின் இந்தப் பேச்சு, தேசியகீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் படித்துப்பார்க்க வேண்டிய ஒன்று. (நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி மட்டும் இங்கே)

கேள்வி : தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை?
பதில் : தேசபக்தி அல்லது வேறெந்த எல்லைக்கோடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது அரசியல் என்னை ஒரு அனார்கிஸ்டாக இருக்கச்சொல்கிறது. தேசபக்தியை ஒரு வன்முறை என்று கருதுகிறேன். இந்தியாவிற்குள் காஷ்மீர், மணிப்பூர் போன்று எங்கெல்லாம் இறுக்கமான எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பல்வேறு வன்முறைகளை நீங்கள் பார்க்க இயலும்.

இந்தியாவில் மட்டுமல்ல..சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா என எல்லா தேசிய அரசுகளிலும் ‘மற்றமை’ என்பது ஓரங்கட்டப்பட்டு, விளிம்பிற்குத் தள்ளப்பட்டு நசுக்கப்படுகிறது. அது இயற்கையும் கூட. தேசபக்தி போன்ற இறுக்கமான அடையாளத்தை ஒருவர் கேள்விக்குள்ளாக்கும் போது அவர் ‘மற்றமை’ ஆக்கப்பட்டு நசுக்கப்படுவார். இது ஒரு வன்முறை. நான் இந்த வன்முறையின் ஓர் அங்கமாகமாட்டேன்.

கே : அப்படியானால் இந்தியாவை ஒரு தேசிய அரசு என நீங்கள் நம்பவில்லையா?
எந்தவகையான தேசிய அரசுகளையும் நான் நம்பவில்லை.

கே : இத்தகைய கருத்து கொண்டிருப்பதில் நீங்கள் முஸ்லிமாக இருப்பது ஒரு பங்கு வகிக்கிறதா?
நான் ஒரு நாத்திகன். உண்மையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நமது சமூகம் இஸ்லாமிய வெறுப்புடையது. அதனால் என்னை ஒரு கலாச்சார முஸ்லிம் என கூறிக்கொள்ள விரும்புகிறேன். மதரீதியாக நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். எனவே, என்னை நாத்திக முஸ்லிம் என்றும் சொல்லிக்கொள்கிறேன். இஸ்லாத்தில் உள்ள ஆணாதிக்கத்தன்மை என்னை அப்படி இருக்க அனுமதிப்பதில்லை. அதையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

கே : இங்கு முஸ்லிம் என்ற ஒரே ஒரு அடையாளம்தான் இருப்பதாக நினைக்கிறீர்களா?
அகண்ட இஸ்லாம் (Pan Islam) என்ற கருத்திற்கு நான் எதிரானவன். இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய உலகம் என்பதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் வேறுபாடுகளைக் கொண்டாடுகிறேன். மக்களுக்கான எந்தவகை பொதுச்சட்டங்கள் (அ) விதிகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை……… அனார்க்கிசமே எனது அறம். மற்றமையை யாரும் ஆளக்கூடாது என நம்புபவன் நான்.

கே : உங்களுடைய கருத்தில் ஆள்வது யார்? ஆளப்படும் ‘மற்றமை’ யார்?
ஒரு தேசத்தில் தலித்கள், பழங்குடிகள், பெண்கள், ஒருபால் உறவினர் (Gay), குழந்தைகள், முஸ்லிம்கள் மற்றும் இவர்களைப்போல அந்நியப்படுத்தப்படுபவர்களைத் தான் மற்றமைகள் எனச் சொல்கிறேன்.

கே : எல்லை வரையறை, தேசம் என்பதெல்லாம் இல்லாமல் ஒரு நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்..
இந்தக்கேள்விக்கு அரசியல்ரீதியாக எப்படி பதில் சொல்வது எனத் தெரியவில்லை. 1947 க்கு முன்பு இந்தியா என்பதே இல்லை.

கே : ஆனால், அப்போது சமஸ்தான அரசுகளால் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டதே..
ஆம்.. எல்லைகள் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்துவிடாது. யாருக்கெல்லாம் இந்த வரையறைகள் மீது நம்பிக்கை இல்லையோ அவர்கள் இதில் அற அடிப்படையில் தலையிடுகிறோம். தலையிடுவது மட்டுமல்ல எதிர்க்கிறோம்.
ஆணாதிக்க சமூகத்தில் வீடு என்ற கருத்தியலைப் பார்த்தால் அதில் தந்தை மட்டுமே எல்லா அதிகாரமும் படைத்தவர். இப்போது நீங்கள் ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள் என்றால் தந்தை என்கிற பிம்பத்தை அழிக்கிறீர்கள் (அ) அவமதிக்கிறீர்கள் என்பது அதன் பொருளல்ல.. தந்தை, தாய் இருவருக்கும் சம உரிமை உள்ள ஒரு உலகத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதுதான் அதன் பொருள்..
ஒரு நிலம் எல்லா வகையான மக்களையும் உள்ளடக்கி இருக்கிறது. சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்படுகின்றன. சட்டங்களுக்காக மக்கள் படைக்கப்படவில்லை. இதுதான் வேறுபாடு.
இதேபோல், பல பள்ளிகள் காலையில் வழிபாட்டுக் கூட்டம் நடத்துகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாததால் நான் அங்கு நின்றதே இல்லை. என்னைப் போன்ற நம்பிக்கை அற்றவர்களை அப்படியான கூட்டங்களில் நிற்கச்சொல்லி கட்டாயப்படுத்துவது ஒருவகையான வன்முறைதான்.

கே : தேசியகீதம் பாடும்போது (அ) வழிபாட்டுக்கூட்டம் நடக்கும்போது எழுந்து நிற்கவேண்டும் என்பதில் என்ன வகையான வன்முறையைப் பார்க்கிறீர்கள்?
இதில் நேரடியான வன்முறை எதுவும் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதில் உணர்வுரீதியான வன்முறை இருக்கிறது. வன்முறை உடல்ரீதியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அது மன ரீதியாகவும் ஏற்படுத்தப்படலாம். சில சமயத்தில் உடல்ரீதியாகவும் நடக்கக்கூடும்.
என்னைப் போன்றவர்கள் மீது எடுத்த எடுப்பிலேயே கேட்கப்படும் கேள்வி நீ பாகிஸ்தான் உளவாளியா? என்பதுதான். நீ அமெரிக்க (அ) சீன உளவாளியா என்று கேட்கமாட்டார்கள். சீனாவும்கூட இந்தியாவைத் தாக்குகிறது. ஆனால், அது மதச்சார்பற்ற பாசிச நாடாகத்தான் கருதப்படுகிறது. இது ஒரு இஸ்லாமிய வெறுப்புப் பார்வை என்று கருதுகிறேன்.

கே : இஸ்லாமிய வெறுப்பு 9/11 இல் இருந்து தொடங்கியதாக நினைக்கிறீர்களா?
அதற்கு முன்பே உருவாகிவிட்டாலும் 9/11 க்குப் பிறகுதான் தீவிரமானது. இன்று தாடி வைத்திருக்கும் எவரும் தீவிரவாதியாகத்தான் பார்க்கப்படுகிறார். எத்தனையோ முஸ்லிம்கள் பல்வேறு சிறைகளில் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆதாரங்களும் இல்லாமல் அடைபட்டுக்கிடக்கிறார்கள்.
என்னுடைய விஷயத்தில்கூட காவல்துறையினர் நடு இரவில் என் வீட்டிற்கு வந்து என்னைக் கைது செய்தது நான் ஒரு முஸ்லிம் என்பதால்தான். தேச துரோகச் சட்டம் பிரிவு 124A மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66A ஆகியவற்றின் கீழ் என்னைக் கைது செய்தார்கள்.

கே : சிறையில் இருந்து வந்ததற்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
என் வாழ்வில் பெரிய ஒழுங்குமுறைகளை எல்லாம் நான் பின்பற்றுவது கிடையாது. விரும்பும்போது எழுகிறேன்; விரும்பும்போது தூங்குகிறேன்; விரும்பும்போது சாப்பிடுகிறேன். காவல்துறை என் கணினியைக் கைப்பற்றியதிலிருந்து பிரவுசிங் செய்ய இன்டர்நெட் சென்டர்களுக்குச் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை வெளியேற்றினார்கள். ஒரு தேசத் துரோகியை தங்கள் சென்டருக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள். டீக்கடைக்காரர் சிகரெட் குடுக்க மறுத்தார். பலரும் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள். ’இந்தியர்கள்’ என்று கையெழுத்திடப்பட்ட மின் அஞ்சல் என் கரங்களை வெட்டிவிடுவதாக மிரட்டியது. இப்போதுகூட நான் வெளியில் புறப்பட்டாலே என் பெற்றோர் பயப்படுகிறார்கள்.
நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தேசத்துரோகச் சட்டத்தில் என்னைக் கைது செய்தவர்கள் அதேநேரத்தில் என் தாயை வன்புணர்வு செய்துவிடுவதாகவும் என்னைக் கொலை செய்துவிடுவதாகவும் என் முகநூல் பக்கத்தில் எழுதியவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

கே : உங்களை நீங்கள் ஒரு இந்தியன் என்று கருதுகிறீர்களா?
நான் ஒரு அனார்கிஸ்ட். எந்தவகையான தேசியத்தையும் நான் நம்புவதில்லை. நான் ஒரு உலகக் குடிமகன். எத்தனையோ மற்ற பொருட்களைப்போல நானும் உலகத்தில் ஒரு பொருள். மனித உயிரிகள்தான் உயர்வானவர்கள் என்று நான் கருதவில்லை.
நன்றி : Shoba Warrier (Rediff.com)

1 கருத்து

 1. Whatever is our background, religion, region etc..
  One should respect his /her country’s national anthem.
  If anyone has any comments or complaints about the national anthem,
  He can write one new anthem which will connect everyone.
  Popularise it among people and start a movement to make it as a national anthem.
  As long as “Jana Gana Mana” is our anthem we should respect it.
  National Anthem is above RELIGziON ,caste , God etc..

ஒரு பதிலை விடவும்