தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, காங்கிரஸும் , சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் கைகோர்க்கவுள்ளன.

நடைபெறப் போகும் தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை எதிர்க்க காங்கிரஸும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கைகோக்கவிருக்கின்றன. இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து மகா கூட்டணி உருவாகவிருக்கிறது.

இதுகுறித்து பேச மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல்.ரமணா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சதா வெங்கட் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய உத்தம் குமார் ரெட்டி –

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கைகோக்கவுள்ளது. எங்கள் நோக்கம் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சிவில் சமுதாய அமைப்புக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். சந்திரசேகர் ராவுக்கு எதிராக மாணவர் அமைப்புகளையும் இதர சமூக அமைப்புகளையும் ஒன்றுதிரட்டுவோம். கூட்டணி தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன மேலும் தேர்தலுக்காக ஒரு பொது அறிக்கையுடன் வர இருக்கிறோம் என்றார் அவர்.

காங்கிரஸும் , தெலுங்கு தேசமும் 36 வருடங்களாக எதிரெதிராக இருந்தோம் ஆனால் தற்போது அரசியல் மாற்றத்துக்காக காங்கிரஸோடு கைகோர்க்கிறோம். கேசிஆர் அரசு அனைத்து வழிகளையும் பயன்படுத்தி ,எதிர்க் கட்சிகளை ஒடுக்குவதற்கு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. கேசிஆரின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் மிகவும் அல்லல் படுகின்றனர்.எனவே காங்கிரசும், தெலுங்கு தேசம் கூட்டணியும் ஒரு வரலாற்று தேவையாக இருக்கிறது . எங்கள் சுய நலன்களை தள்ளி வைத்துவிட்டு கூட்டணிகளோடு சேர்ந்து கேசிஆ -ரை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என்று தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவர் பெட்டி ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தின் முதல் முதல்வராக டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்த நிலையில், முன்கூட்டியே சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையை கலைக்கக் கோரி மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, சட்டப் பேரவை அண்மையில் கலைக்கப்பட்டது. தற்போது சந்திரசேகர் ராவ் காபந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

Courtesy : The New Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here