கேரளாவில் மிகவும் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றானது இந்த தெரளி அப்பம். விழாக் காலங்களில் கண்டிப்பாக எல்லோருடைய வீட்டிலும் செய்வார்கள். நான் என்னுடைய சிறு வயதில் கேரளாவில் உள்ள என் பாட்டி வீட்டுக்குச் செல்லும்போது அங்கு மாமா பிள்ளைகள், சித்தி பிள்ளைகள் எல்லோருடனும் சேர்ந்து இந்த பலகாரம் செய்வோம். இதை பிரிஞ்சி இலையில் செய்வார்கள். அங்கு பிரிஞ்சி இலை மரம் உண்டு. இதற்கு தெரளி இலை என்று பெயர்.

பச்சை பசேலென்று பார்ப்பதற்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும். மாவைப் பக்குவமாக கலந்து பாட்டி எங்களிடம் தந்து விடுவார்கள். நாங்கள் இலையை கோன் போல் செய்து அதில் மாவை நிரப்பி தென்னம் ஓலையில் உள்ள குச்சியினால் குத்தி மூடுவோம். பின் அதை வேக வைத்து தருவார்கள். சாப்பிடும்போது பிரிஞ்சி இலையின் வாசத்துடன் மிகவும் அருமையாக இருக்கும்.

இங்கு சென்னையில் ப்ரெஷ்ஷாக பிரிஞ்சி இலை கிடைப்பதில்லை. அதனால் நான் வீட்டில் இருந்த பிரிஞ்சி இலையை உபயோகப்படுத்தினேன். சுடுநீரில் போட்டு எடுத்ததும் அது துவண்டு விட்டது. அதன் பின்பு கோன் செய்வதற்கு மிகவும் வசதியாக இருந்தது. அருமையான இந்தப் பலகாரத்தை நான் இந்தக் கார்த்திகைக்குச் செய்தேன். இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவையான பொருட்கள்:

வறுத்த பச்சரிசி மாவு -2 கிண்ணம்

பொடித்த வெல்லம் -1 கிண்ணம்

மஞ்சள் வாழைப் பழம் -2 சிறியது

ஏலக்காய் தூள் -1/4 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி
.
பிரிஞ்சி இலை – மாவு பொதிந்து வைப்பதற்கு

லேசாக வறுத்த தேங்காய் துருவல் -1/2 கிண்ணம்

செய்முறை

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். நிறைய ஊற்ற வேண்டாம்; ஏனென்றால் மாவு கொழுக்கட்டை மாவுப் பதத்தில் இருக்க வேண்டும். மண் இல்லாத வெல்லமாக இருந்தால் அப்படியே மாவில் போட்டுப் பிசையலாம். மாவில் கரைத்த வெல்லம், சீரகம் வறுத்த தேங்காய், பழம், ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிரிஞ்சி இலையில் வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 30 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். ஆறியவுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். விழா சமயங்கள் என்றில்லாமல் சாயங்காலம் சிற்றுண்டியாக பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு
கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here