தென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான
மஹாநதி (Mahanati) 50 நாட்களை கடந்து தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

தமிழில் நடிகையர் திலகம் என்ற தலைப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகள்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நாக் அஷ்வின் இயக்கிய இப்படத்தில் சமந்தா, துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவெரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் பெண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை மஹாநதி பெற்றுள்ளது. ரூ. 75 கோடி வசூல் செய்துள்ள இத்திரைப்படம் ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

ரூ. 23 கோடி முதலீட்டில் தயாரான இத்திரைப்படம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமோக வரவேற்பை பெற்றது. அமெரிக்காவில், $2.5 மில்லியன் வசூல் செய்து, எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி தொடர், ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம், மஹேஷ் பாபு நடித்த பாரத் ஆனே நேனு மற்றும் ஸ்ரீமாந்துடு ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

வெளிநாட்டில் இத்திரைப்படத்தை விநியோகித்த நிர்வாணா சினிமாஸின் சந்தீப் பேசுகையில், “இத்திரைப்படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இதற்கு முன் அமெரிக்காவில் நன்றாக ஓடிய திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் நல்ல கதையம்சம் இருக்கும். பெல்லிசூப்புலு, அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆவ்! போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் எப்போதுமே அமெரிக்கவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அந்த வரிசையில் மஹாநதியும்
இணைந்துள்ளது,” என்றார்.

வாழ்க்கை வரலாற்று படங்கள் தெலுங்கு சினிமாவில் அரிதாக வரும் நிலையில் மஹாநதி வெற்றியடைந்திருப்பது மற்றொரு சிறப்பு. வெளியான வாரயிறுதியில் மட்டுமே உலகெங்கிலும் ரூ. 20 கோடி வசூல் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வெற்றி தன்னை மேலும் பொறுப்பானவராக மாற்றியுள்ளது என்றார் கீர்த்தி சுரேஷ். “இந்த வரவேற்பு
எனக்கு உற்சாகமளித்துள்ளது. அதேசமயம் எதிர்காலத்தில் நான் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என கருதுகிறேன். பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்,” என்றார்.

ஒட்டுமொத்தமாக இத்திரைப்படம் ரூ. 42 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தெலுங்கு பேசும் மாநிலங்களில் சுமார் ரூ. 28 கோடி, பிற மாநிலங்களில் ரூ. 3.45 கோடி, வெளிநாடுகளில் ரூ. 10.5 கோடி ஆகியவை அடங்கும். இதற்கு முன் 2015ல் அனுஷ்கா ஷெட்டி நடித்த ருத்ரமாதேவி ரூ. 41.5 கோடி வசூல் செய்தது பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது.

அடையாளம் வெளியிட விரும்பாத ஒரு முன்னணி விநியோகிஸ்தர் இத்திரைப்படம் எல்லா பங்குதாரர்களுக்கும் 100 சதவீத வசூலை அள்ளித்தந்துள்ளது என்றார். “இதற்கு முன் இது போன்றதொரு வெற்றியை கண்டதில்லை. பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் கூட இது போன்றதொரு வெற்றியை ருசித்ததில்லை. மஹாநதி இதற்கு விதிவிலக்காக உள்ளது. இது பெண்ணை மையப்படுத்திய திரைப்படமாக இருப்பது மற்றொரு சிறப்பு,” என்றார் அவர்.

இத்திரைப்படத்தை கண்டு நெகிழ்ந்து போன ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மஹாநதி திரைப்படக் குழுவினரை மே மாதம் நேரில் அழைத்து பாராட்டினார். வரி விலக்கு அளிக்க முன்வந்த போதும் தயாரிப்பு தரப்பு அதனை நிராகரித்தது. தனது தந்தை தான் வரி விலக்கை ஏற்கவேண்டாம் என முடிவு செய்ததாக சொல்கிறார் தயாரிப்பாளர் ப்ரியங்கா தத். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான அஷ்வினி தத்தின் மகள் ப்ரியங்கா தத் என்பது குறிப்பிடத்தக்கது. ”முதலமைச்சர் எங்களை அழைத்ததை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம். தனது கட்சி அலுவலகத்தை எங்களது திரைப்பட சுவரொட்டிகளால் அலங்கரித்து, அனைவரையும் அழைத்து, சிறப்பாக உரையாற்றினார். தான் திரைப்படங்கள் பார்ப்பது அரிது என்று எங்களிடம்
சொன்னார். ஆனால், மஹாநதி பார்த்து அவருக்கு பிடித்துப்போனது எங்களுக்கு பெரிய விஷயம். எங்கள் மீது அவர் காட்டிய அன்பு இதுவரை எங்களுக்கு கிடைத்திடாதது. தனது அமைச்சர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்தார். திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க விரும்பினார். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வரி உதவும் என்பதால் எனது தந்தை அதனை மறுத்துவிட்டார்,” என்றார் அவர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்