தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டம்; போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

0
531

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிடும்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் .

மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிக்கு போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. லட்சக்கணக்கான மக்களை தடுத்த நிறுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.

பல்வேறு தடைகளைத் தாண்டி, போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் ஏராளமானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை மடத்தூரில் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது . தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இடையிடையே கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு, தடியடி, துப்பாக்கிச் சூடு ஆகிய நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நேரம் ஆக ஆக போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், நாலா திசையில் இருந்தும் கிராம மக்கள் திரண்டு வந்து கொண்டே இருப்பதாலும் காவல்துறையினர், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை .

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்களை வெளியேற்ற காவல்துறை தடியடி நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் . அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here