தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொந்தரவு தரக்கூடாது – உயர் நீதிமன்றம்

0
203

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொந்தரவு தரக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது .

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில், 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் பல பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை போலீஸார் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் கூட துன்புறுத்தல் செய்கின்றனர். மேலும் போலீஸார் விசாரணை என்ற பெயரில் தங்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை துன்புறுத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடாதவர்களை துன்புறுத்துகின்றனர்.போராட்டத்தில் தொடர்பு இல்லாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக மக்கள் அதிகார அமைப்பினைச் சேர்ந்த சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களை போலீஸார் மனிதாபிமானம் இன்றி விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக யாரையும் கைது செய்யக் கூடாது, துன்புறுத்தக் கூடாது, விசாரணை தொடர்பாக எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு போலீஸார் தொல்லை கொடுக்க கூடாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here