14 பேரை பலிகொண்ட தூத்துக்குடி காவல்துறை துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவம் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அரசு அதிகாரம் முற்றிலுமாக செயலிழந்ததால் ஏற்பட்டது என்றும் தவறான உள்நோக்கம் கொண்ட கொலை முயற்சியாகவும் இருந்திருக்கலாம் என்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய 23 நபர்களைக் கொண்ட இக்குழு, 22 மே 2018 அன்று தூத்துகுடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து முழுமையான நிர்வாக மற்றும் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்றது.

’தி டே தூத்துக்குடி பர்ண்ட்’(The Day Tuticorin Burned) என்ற தலைப்பில் ஐந்து பகுதிகளைக் கொண்ட விசாரணை அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் இக்குழு வெளியிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மக்கள் விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திலக் மற்றும் செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முனைவர் கிறிஸ்தோதாஸ் காந்தி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன், பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன், வழக்கறிஞர் கீதா ராமசேஷன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஜேசைய்யா ஜோசஃப், தேசிய மீனவர் மன்றத்தைச் சேர்ந்த பீட்டர், சமூக ஆர்வலர் டாம் தாமஸ், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விசாரணை அறிக்கையை வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதியும் விசாரணைக் குழு உறுப்பினருமான அரிபரந்தாமன், தூத்திகுடியில் காவல்துறை அடக்குமுறை இன்னும் தொடர்வதாக குற்றம்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துகுடியிலிருந்து சென்னை வரவிருந்த பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். பொதுமக்களை கைது செய்து அவர்களது மீது பெயர் குறிப்பிடப்படாத முதல்
தகவலறிக்கை பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் தூத்துகுடியில் இயல்புநிலை திரும்பவேண்டும் என்றும் கூறினார். இருக்கின்ற சட்டத்தின் படி அனைத்து மரணங்களும் முதல்தகவலறிக்கையில் கொலைகளாக பதிவுசெய்யப்படவேண்டும் என்றும் வேறு மாதிரியான சாட்சியங்கள் கிடைக்கின்ற வரையில் அதே கோணத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

குறிதவறாது சுடும் வீரர்கள் மற்றும் மறைந்திருந்து சுடுவீரர்கள் (Snipers) பயன்படுத்தப்பட்டதாகவும், பிரபலமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளான தெரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி போன்றவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டதாகவும், 100 நாள் போராட்டம் அறிவித்த பிறகும் விவகாரத்தை தீர்த்து வைக்க அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை தவறியதாகவும் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், மே 22 ஆம் தேதி அதிகாரத்தை மொத்தமாக காவல்துறைக்கு தாரைவார்த்துவிட்டு மாவட்ட நிர்வாகம் தலைமறைவானதாலேயே வன்முறையும் மரணங்களும் நேர்ந்ததாக குற்றம்சாட்டுகிறது.

அறிக்கையை வெளியிட்டு ’ஜனநாயகத்தின் முரண்பாடு’ என்ற தலைப்பில் பேசவிருந்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா உடல்நலக் குறைவால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) வெளியிடப்பட்ட அறிக்கையின் தமிழ் பதிப்பு ஜூலை 22 ஆம் தேதி தூத்துகுடியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here