தூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்

Thoothukudi Massacre: End of Governance

0
2712

முதலில் மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள் நாம் என்கிற தன்னிலையை மறந்துவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கம்; எந்தத் தொழிலும் திட்டமும் மக்களுக்காகத்தான் என்பதை அறுதியிட்டு உறுதி சொன்ன ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி இனியும் ஒரு நொடிகூட சொல்ல முடியாது. வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் நச்சு மூலமாக மக்களைக் கொல்லாதீர்கள் என்று 100 நாட்களாக அமைதி வழியில் போராடிய மக்களுக்குச் செவிசாய்க்காமல் அவர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டிருக்கிறது இந்த அரசு. 100 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடியில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் ஒன்று திரண்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஸ்டெர்லைட்டை விரிவாக்க அனுமதிக்காதீர்கள் என்று குரல் உயர்த்தியபோதே அரசு அதற்கு செவிமடுத்திருக்க வேண்டும். கடந்த 100 தினங்களில் இந்தப் போராட்டத்துக்குத் துணை நிற்கும் வகையில் நீதியரசர் ஹரி பரந்தாமன் உள்ளிட்டோர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நேரடியாக சென்று வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அனுமதியிலுள்ள சட்டவிரோதத் தன்மையை அம்பலப்படுத்தினார்கள். அப்போதுகூட அரசு கள்ள மவுனத்தையே கடைபிடித்தது.

100 நாட்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் தொடங்கியபோது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசினார்; வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்குக் கடமைப்பட்டவராக பேசுவதா மக்களாட்சியில் ஓர் அமைச்சரின் பொறுப்பு? அற வீழ்ச்சியின் அதல பாதாளம் இது. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை விளம்பரங்கள் மூலமாக பணத்தை அள்ளி வழங்கியதால் ஊடகங்களில் ஒரு பகுதியினர் இந்த மக்கள் போராட்டத்தின் நியாயங்களை உரத்துப் பேசவில்லை. நிலம், நீர், காற்றையும் மக்களின் ஆரோக்கியத்தையும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை பாதிக்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை மக்கள் கடந்த 100 நாட்களில் தொடர்ந்து வெளியிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு மதிப்பளித்து பேசுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி ரத்து என்பது போன்ற மேல் பூச்சு அறிவிப்புகளை தமிழக அரசு செய்தது; ஆனால் நச்சு ஆலையின் செயல்பாட்டில் எந்தத் தடங்கலும் உண்டாகவில்லை என்பதை மக்கள் கண்கூடாக பார்த்தார்கள்.

மக்களின் உயிர்களுக்கு எந்த மதிப்பும் அளிக்க மாட்டோம் என்று 100 நாட்களாக அலட்சியம் காட்டிய அரசு 100வது நாளில் மக்களின் உயிர்களையே சூறையாடியிருக்கிறது; அரசாங்கமே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வெனிஷ்டா என்ற 17 வயது மாணவியின் உட்பட 15க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது அரசாங்கம். வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு அடிமை வேலை செய்ய மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை. மக்களுக்குக் கடமையாற்றவே இந்த அரசைத் தேர்வு செய்தார்கள். அந்தக் கடமையிலிருந்து தவறிய இந்த அரசு வீழும்; மக்கள் இதனை வீழ்த்துவார்கள்.

இப்போது செய்திப் புறா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here