தூத்துக்குடி படுகொலைகளை நேரில் விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணையம்

0
429

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ஆம் தேதி மக்கள் போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராஜ ராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில், தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இருக்கிறது .

அதனால் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக் கோரி மே 22 ஆம் தேதி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் . இல்லையென்றால் காவல்துறையால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூர சம்பவத்தில் உண்மை வெளிவராது என்று வாதிட்டதின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாக தங்கள் குழு மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

தேசியமனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது –

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ஆம் தேதி மக்கள் போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர் .

இது குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கக் கேட்டு தமிழகத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு மே 24-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் விவரங்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தோம்.

இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அல்லது அதன் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம், அதில் உள்ள உண்மைகள், வழக்கின் சூழல் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அடிப்படையில் மனுதாரரின் மனுவை ஏற்று கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மை நிலவரம், மனித உரிமைகள் மீறல்கள் , பாதிப்புகள், கொல்லப்பட்ட 13 பேரின் உறவினர்களின் வாக்குமூலம், நேரில் பார்த்த சாட்சியங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றைப் பெற வேண்டும் . இதற்காக மூத்த போலீஸ் எஸ்.பி. க்கு குறைவில்லாத அதிகாரத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படுவார். அவருக்குக் கீழ் 2 டிஎஸ்பிகளும், இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டு விசாரணையில் ஈடுபடுவார்கள்.

இந்த விசாரணைக்குச் செல்லும் மூத்த போலீஸ் எஸ்பி, 2 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தமிழகத்தில் இருந்து நியமிக்கப்படமாட்டார்கள். தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இந்தவிசாரணையில் ஈடுபடுவார்கள்.

அவர்கள் ஒரு நாள் தூத்துக்குடியில் முகாமிட்டு, பொதுமக்களிடம் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து குறைகேட்பு முகாம் நடத்துவார்கள். இந்த முகாமில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்று தங்களின் பாதிப்புகளை தெரிவிக்கலாம்.அவை அதிகாரிகளால் பதிவு செய்யப்படும். இரு வாரங்களுக்குள் இந்த அறிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சமர்பிக்கவேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here