தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மாவட்ட நிர்வாகமும், போலீசும் குற்றவாளிகள் – உண்மை கண்டறியும் குழு தகவல்

0
682

தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள் . இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய 23 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களோடு பேசியது .

இந்த உMண்மை அறியிம் குழுவில், 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் (நீதிபதி கோல்சே பட்டேல், நீதிபதி அரிபரந்தாமன்) ஆகியோர் தலைமையில் 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், தடியடியில் காயமடைந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு, தடியடி, அத்துமீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வாக்குமூலம் பெறப்பட்டன.

விசாரணையை தொடர்ந்து அந்த குழு சார்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றிடிபென் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

63

அமைதி பேச்சு வார்த்தைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மாவட்ட நிர்வாகம் அழைக்கவில்லை. போராட்டக்காரர்களை பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிந்தது . ஒரு சில போராட்டக்காரர்களை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர் . மேலும் பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் பங்கேற்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கலெக்டரே முன்னிலை வகித்து நடத்தியுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது, இது ஏற்கனவே வந்த லட்சக்கணக்கான மக்களை கணக்கில் எடுத்து கொள்ளாததை காட்டுகிறது. மேலும் நிர்வாகத்தின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

100 நாட்களாக போராடிய மக்களை கலெக்டர் சந்திக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களை தமிழக அமைச்சர்களோ, மத்திய மந்திரிகளோ சந்திக்கவில்லை.

. 144 தடை உத்தரவு பயங்கரமான மற்றும் உடனடி ஆபத்து இருக்கும்போது பிறப்பிக்கப்பட வேண்டியது . துணை தாசில்தார் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தார் என்று சொல்வது மிகவும் அசாதாரணமானது . கலெக்டர், துணை கலெட்டர், தாசில்தார், துணை தாசில்தார் எவரும் அவரவர் இடங்களில் இல்லை.

மாவட்ட கலெக்டர் 144 தடைக்கு உத்தரவு கொடுத்திருந்தால் அவர் அங்கு இருந்திருக்க வேண்டும் . 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை

காவல் துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு நவீன ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுத்ததாக கூறப்படும் நபர்கள் அந்த இடத்தில் இல்லை. அப்படி இருக்கையில் யார் இவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது .

ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . இந்த பாதிப்பினால்தான் மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர். மே 23-ஆம் தேதி தூத்துக்குடியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரியில் நுழைந்த போலீஸார் நோயாளிகளையும் , உறவினர்களையும் தாக்கியுள்ளனர். .

அண்ணா நகர் பகுதியில் போலீசார், வீடு புகுந்து , வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மக்களை அடித்து, இளைஞர்களை கைது செய்தனர். காவல்துறையின் கொடூரமான தாக்குதலால் பலர் காயமடைந்து கால் கைகளை இழந்தனர். மேலும் உளவியல் ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டனர் .

போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழையும் போதே அங்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன என்றும் சீருடை அணியாத போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களுடன் இருந்து கொண்டு கல்லெறிந்தனர் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பார்த்தவர்கள் கூறினார்கள்

ஒரு பெண்ணை போலீஸார் நவீன ரக துப்பாக்கியின் பின்புறத்தால் அவரது வயிற்றில் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்டு கடும் உதிரப் போக்கு அந்த பெண்ணுக்கு. அனேகமாக உடல் தேறியவுடன் கர்ப்ப பையை எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்று உண்மை கண்டறியும் குழு கூறியது .

மேலும் துப்பாக்கி சூட்டினால் தலை வெடித்து சிதறிய ஜான்சியின் வீட்டுக்குச் சென்று ஜானிசி துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை போராட்டத்தின்போது நடந்த தள்ளுமுள்ளுவில் இறந்துவிட்டார் என்று எழுதி கேட்கும் கொடுமையும் தூத்துக்குடியில் நடக்கிறது .

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். ஸ்டெர்லைட் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு ஆலை இருந்த இடம் வெறுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் நடந்த சட்டத்திற்கு புறம்பான தொடர் தேடலுக்கும், கைதுகளுக்கு, துன்புறுத்தல்களுக்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இன்னும் 2 வாரங்களில் இந்த குழு துப்பாக்கி சூடு குறித்து முழுமையான அறிக்கையை வெளியிடும் என்று கூறினர்

முழு விவரங்களுக்கு : http://www.kractivist.org/ [People’s Inquest into Thoothukudi Firings finds TN Police and District Admin guilty as accused]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here