தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது ? : உயர்நீதிமன்றம்

0
673

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார்.

அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணை நடத்தக் கூடாது என வினா எழுப்பினார். அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும், வீடியோ ஆதாரங்களைத் தாக்கல் செய்யவும் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்துத் துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்யத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை என்கிற பெயரில் வீடுகளுக்குள் நுழைந்து காவல்துறையினர் பொதுமக்களைத் துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். அதற்குக் காவல்துறையின் விசாரணையில் நீதிமன்றம் தலையிடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அதே சமயம் விதிகளை மீறிய மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here