தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எஃப்.ஐ.ஆரில் தகவல்

0
303

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது
தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? உத்தரவிட
என்னக் காரணம் என்பது தொடர்பாக இரண்டு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், திரேஸ்புரத்திலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகளுக்கு, 2 வட்டாட்சியர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு, துணை வட்டாட்சியர் சேகர் உத்தரவிட்டதாகவும், போராட்டக்காரர்களை எவ்வளவு எச்சரித்தும் வன்முறையைத் தொடர்ந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர்
அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, திரேஸ்புரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு, வட்டாட்சியர் கண்ணன் உத்தரவு பிறப்பித்ததாகவும்,
திரேஸ்புரத்தில் நடந்த தொடர் வன்முறையைத் தடுக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் செய்து வன்முறையாளர்களை கலைக்க வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்தீபனுக்கு
உத்தரவிட்டேன் என்று வட்டாட்சியர் கண்ணன் கூறியிருப்பதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, வட்டாட்சியர் உத்தரவிட்டதாக
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்