தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்

0
551

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் தமிழரசனும் ஒருவர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஓட்டப்பிடாரம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here