தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தூப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here