தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது:

துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாகத் தோற்றுவிட்ட அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் மே 25 (இன்று) முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத் தில் இருக்கிறார்கள். எனவே, துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் மே 25-ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் .
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கண்டித்து இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சில அரசு பேருந்துகள் இயங்கவில்லை.

இந்நிலையில் முழு அடைப்பையொட்டி, சென்னையில் பாதுகாப்புப் பணியில் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம், மெரினா, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்