தூத்துக்குடி துப்பாகிச்சூடு வழக்கில் சிபிஐ விசாராணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதேபோல தூத்துக்குடியில் அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் அடுத்தடுத்து 12 பேர் இறந்தனர். 


வன்முறையின் தொடர்ச்சியாக அதே மாதம் 23-ஆம் தேதி தூத்துக்குடி அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் இறந்தார். இந்த சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. துப்பாக்கிச் சூடுக்கு காரணமான காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். 

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பாக 10 ஆயிரம் பேர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸாரும், 500 பேர் மீது தென்பாகம் போலீஸாரும், 500 பேர் மீது தலா 12 சட்டப்பிரிவுகளின் கீழ் வடபாகம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.  இதற்கிடையே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி அண்மையில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு, சென்னை சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி மாற்றப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவே தொடர்ந்து மேற்கொள்ள உத்தரட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது- அப்போது துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here