தூத்துக்குடி ஜான்சி : கடலில் கரைந்த மூளைச் சிதறல்கள்

Jhansi, 46, was killed in the Jallianwala Bagh-style Thoothukudi massacre

0
968

சுட்டுக் கொல்லப்பட்ட ஜான்சி ஃபெர்னாந்துவுக்கு 46 வயது. கடல் தொழில் செய்யும் சேசுபாலனின் மனைவி. 23, 19,15, 11 வயதுகளில் நான்கு பிள்ளைகள். இந்தப் போராட்டத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை. அவருண்டு, அவரது குடும்பம் உண்டு என இருந்தவர். அந்த ஊரில் அவரது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மகள் வீடு. மே 22 அன்று மதியம் 2.45 மணி அளவில் மகள் வீட்டுக்கு மீன் கொடுத்து வருவதற்காகச் சென்று கொண்டிருந்தார். அன்று ஆட்சியர் அலுவலகம் முன் நடந்ததை எல்லாம் அவர் முழுமையாகத் தெரிந்திருந்தாரா என்பது ஐயத்துக்குரியதே.

அன்று காலை காவல்துறை கொலைவெறி ஆட்டம் ஆடியபோது போராட்டத்தில் முன்னணியில் இருந்த தெரேஸ்புரம் மீனவ இளைஞர்களில் சிலரைக் குறி வைத்துத் தேடித்திரிந்தது கொண்டிருந்தனர்.. திரேஸ்புரம் பகுதியில் ஆங்காங்கு நின்று அன்றைய நிகழ்வுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு வேன்களில் ஏற்றிக் கடுமையாக அடிக்கப்பட்டனர். அடிப்பது, கொண்டுபோய் அவர்களை வல்லநாடு போலீஸ் பயிற்சியகத்தில் வைத்துச் சித்திரவதை செய்வது என்கிற திட்டத்தோடு யாரையாவது போட்டுத் தள்ளுவது என்கிற வெறியும் அவர்களுக்கு இருந்தது. அப்படிச் சுட்டுக் கொண்டு வரும்போது மகள் வீட்டுக்கு மீன்களுடன் சென்று கொண்டிருந்த ஜான்சி அவளை எதிர் கொண்டு ஒரு மரத்தடியில் ஒளிய முயற்சித்தார். வெடித்துச் சிதறிய குண்டு அவள் மண்டையைப் பிளந்தது.

நெடு நேரம் ஜான்சி வராததையும், துப்பாக்கிச் சூடு நடந்ததையும் அறிந்த்த அவரது வீட்டர் அவரைத் தேடி வந்த போதூஏதோ ஒரு உருவத்தை வேனில் தூக்கி எறிந்ததைப் பார்த்தனர். அப்போதும் அவர்களுக்கு அது ஜான்சியாக இருக்குமோ என்கிற சந்தேகம் இல்லை.

அவர்கள் சில மணி நேரம் தேடிய பின்புதான் ஒரு பெண் துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிந்தது. விசாரித்தபோது அது யாரோ வினிதா எனக் கூறியுள்ளனர்.

சற்றே கவலை நீங்கியபோதும் அவருக்கு என்ன நேர்ந்தது என்கிற கவலை அவர்களுக்கு வாட்டியது.

கொல்லப்பட்ட உடல்கள் அரசு மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கிருந்த கெடுபிடிகளை மீறிச் சென்று விசாரித்தபோடு அவர்கள் மிரட்டி வெளியேற்றப்பட்டனர்.

பிறகு அவர்கள் அழுது புலம்புவதைப் பார்த்து உள்ளே சென்று விசாரித்து மீண்டும் அது வினிதா என்றனர். நாங்கள் ஒரு முறை உடலைப் பார்க்க வேண்டும் எனக் கெஞ்சியபோது யாரோ சற்றே இரக்கமுள்ள அதிகாரி அந்த உடலில் இருந்து அகற்றப்பட்ட தாலிக் கொடியைக் கொண்டு வந்து காட்டியுள்ளார்.

அது ஜான்சியின் கழுத்தில் கிடந்த தாலிக் கொடி. அவசர அவசரமாக வினிதா என்கிற பெயரை அடித்து ஜான்சி என எழுதி மெமோ கொடுத்துள்ளனர். இப்போது அவரது உடலில் இருந்த அந்த தாலிக் கொடியும் இன்னொரு ஆபரணமும்தாதக் குடும்பத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி விசாரணை முடியும் வரை அப்படி உடலில் இருந்த நகைகளைக் கொடுக்கக் கூடாது என்பது குறித்தும் கொன்றவர்கள் கவலைப்படவில்லை.

தேடித் திரிந்தபோது ஒரு உடலைத் தூக்கி அந்தக் கொலைகாரர்கள் வேனில் எறிந்தார்களே அது தங்களது ஜான்சியின் உடலைத்தான் என்பதை
அறிந்த அவரது மகள் முதலானோர் அவர் சுடப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது…….

“அங்கே கொஞ்சம் மூளையும், மண்டை ஒட்டுச் சில்களும் சிதறிக் கிடந்தது சார். எதாவது நாய் கவ்வித் தூக்கிச் செல்லக் கூடாதுன்னு எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய்க் கடல்ல எறிஞ்சுட்டு வந்தோம்..”

– என அவரது சகோதரி கதையை முடித்தபோது ஜான்சியின் கடைசிப் பெண்ணின் கண்கள் எங்கோ தொலைத்தூரத்தில் குவிந்திருந்தது.

கதை முடிய வில்லை. இப்போது கொல்லப்பட்ட 5 பேர்களின் உடல்களைப் பரிசோதிக்க அவரவர் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த 5 பேர்கள் யார் யார் என 28-05-2018 தினத்தந்தி நெல்லைப் பதிப்பில் பெயர்கள் வந்துள்ளன (பக்.2). அவை:

ரஞ்சித் குமார், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், மணிராஜ், வினிதா

சரி யார் அந்த வினிதா?

அப்படியானால் ஜான்சி எங்கே?

ஜான்சியின் உடல் என மெமோ பதிவு செய்ததன் பொருளென்ன?

Daily Thanthi, May 28, 2018. Page 2. Tirunelveli Edition.
Daily Thanthi, May 28, 2018. Page 2. Tirunelveli Edition.

செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here