தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சண்முகம் என்பவரின் உடல், மறுபிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் மே 22-ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப‌ட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, சுட்டு கொல்லப்பட்டவர்களின் உடலை பொதுமக்கள் தரப்பிலான தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த உடல்களை அவர்களின் உறவினர்கள் கேட்கும் பட்சத்தில் ஒப்படைக்கலாம். பிரேத பரிசோதனையின் போது குண்டடிபட்ட இடங்களை கண்டிப்பாக புகைப்படம், வீடியோ மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர் .

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 7 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான சண்முகம் என்பவரது உடலை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை முடிந்ததும், சண்முகத்தின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

பலியானவர்களில் மற்ற இருவர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here