பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக எந்த ஒரு தனிநபர் மீதும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டவில்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநர் குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான திமுக நடவடிக்கை எடுக்க வலியறுத்திய நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

துணை வேந்தர்கள் நியமனத்தில் பலகோடிக்கணக்கான பணம் கைமாறப்படுகிறது என்ற தகவல் கல்வியாளர்கள் சிலருடன் ஆளுநர் உரையாடும் கிடைத்தது. அதைத்தான் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். ஆனால், ஆளுநர் பன்வாரிலால் யாரையும், எந்த தனிப்பட்ட நபர் மீதும் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கவில்லை பணம் பெற்றார்கள் என்று குறிப்பிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், ஆளுநர் பேச்சு குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு மாறான தகவல்கள் வலம் வருகின்றன.

தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கக் கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதைக் கல்வியாளர்கள் மூலம் அறிந்தேன். முதலில் இதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், நான் வந்தபின் இந்த நியமனத்தில் மாற்றம் கொண்டுவந்தேன். நான் 9 துணைவேந்தர்களை முழுவதும் தரத்தின் அடிப்படையில், கல்வித்தகுதியின் அடிப்படையில் நியமித்திருக்கிறேன் என்று மட்டுமே உண்மையில் ஆளுநர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

பாரதியார் பல்கலையின் துணை வேந்தர் ஏ. கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை கையூட்டு பெற்றவழக்கில் கைது செய்தது, மதுரை காமராசர் பல்கலை துணை வேந்தர் பிபி செல்லதுரை நியமனத்தை ரத்து செய்தது ஆகியவற்றை மக்கள் அறிந்திருப்பார்கள்.

ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தபின் துணை வேந்தர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. துணை வேந்தர்கள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், திறமையின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆளுநரால் நியமிக்கப்பட்ட 9 துணை வேந்தர்களும், உயர்ந்த நேர்மை, அதிக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற திறமையின்,நேர்மையின் அடிப்படையில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவது, உயர்கல்வியின் தரத்தை உயர்த்த உறுதியாக உதவும், மாணவர்களின் சிறந்த, ஒளிமயமான எதிர்காலத்துக்கு உதவும்

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்