துக்ளக் தர்பார்: திரை விமர்சனம்

0
387

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ்.

தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை.

ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ராயப்பன் (பார்த்திபன்). அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனுக்கு (விஜய் சேதுபதி) ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும் சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்.

ஆனால், அது தொடர்பான ஆவணங்களை யாரோ ஊடகங்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். 50 கோடி ரூபாய் பணத்தையும் வைத்த இடத்தில் காணவில்லை. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை.

படத்தைத் துவக்கத்திலிருந்து முடிவுவரை, ஜாலியாக, மேலோட்டமாகவே எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர். அதில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பார்த்திபன், பகவதி பெருமாள், விஜய் சேதுபதி, கருணாகரன் ஆகிய நான்கு பேரும் அவ்வப்போது சிறிது சிரிக்க வைக்கிறார்கள். இதெல்லாம் இந்தப் படத்தின் பலங்கள்.

ஆனால், படம் துவக்கத்திலிருந்து முடிவுவரை எந்த ஒரு இடத்திலும் பார்வையாளர்களை திரைக்கதையோடு ஒன்றவைக்கவில்லை. 50 கோடி ரூபாய் காணாமல் போகும்போதுகூட, பார்ப்பவர்களுக்கு அதுவும் காமெடி காட்சியைப் போலத்தான் தோன்றுகிறது. தவிர, எடுத்துக்கொண்ட கதைக்கு ஸ்பீட் பிரேக்கரைப் போல, ராஷி கண்ணாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான காதல் காட்சிகள் வேறு.

இதுதவிர, கண்ணீரும் கம்பலையுமாகவே படம் முழுக்க வந்துபோதும் தங்கச்சியும் இந்தக் கதையில் உண்டு.

ஏகப்பட்ட படங்களில் நடிப்பதாலோ என்னவோ, ஒரே மாதிரியான முக பாவனையுடன் வந்துபோகிறார் விஜய் சேதுபதி. கதாநாயகன் இருமனநிலை (Split personality) கொண்ட மனிதனாகக் காட்டப்பட்டும், இந்த இரு ஆளுமைகளுக்கும் இடையில் முகபாவனையிலோ, நடிப்பிலோ வித்தியாசத்தைக்காட்ட விஜய் சேதுபதி முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை.

ராயப்பனாக வரும் பார்த்திபன், ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்கிறாரா அல்லது கேலி செய்கிறாரா என்பதை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது. படம் நெடுக உற்சாகமாக வந்துபோவது பகவதி பெருமாள் மட்டும்தான். அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. படத்தின் முடிவில் சத்யராஜ் வரும் காட்சிதான் படத்தின் சிறந்த பகுதியாக அமைகிறது.

ஒரு விடுமுறை நாளில், வீட்டிலிருந்தபடி ஒரு முறை பார்க்கலாம்.

 http://bbc.com/tamil

[ORC]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here