“தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றியது ரமலான்”

Muslims up late for Ramadan saved lives by knocking on people's doors when fire broke out

0
316
தீயில் எரிந்துபோன க்ரென்ஃபெல் டவர்

லண்டன் மாநகரத்திலுள்ள 24 மாடி கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் கடந்த புதன் கிழமை (ஜூன் 14) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீயிலிருந்து ஏராளமான மக்கள் காப்பாற்றப்படுவதற்குக் காரணம், ரமலான் மாத இரவு நேர வணக்க, வழிபாடுகள்தான் என்பது அந்தக் குடியிருப்பு மக்களின் தொலைக்காட்சி பேட்டிகளிலிருந்தும் சமூக வலைத்தளப் பதிவுகளிலிருந்தும் தெரிய வந்துள்ளது. ”பள்ளிவாசல்களுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவுக்குப் பின்னர் வந்த முஸ்லிம் இளைஞர்கள்தான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எங்களை எழுப்பிவிட்டுக் காப்பாற்றினார்கள்” என்று தீ விபத்திலிருந்து தப்பிய நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சிகளிடம் சொன்னார்; ஸ்ரீஞ்சாய் சட்டர்ஜி என்பவர் ”ரமலான் உயிர்களைக் காத்தது” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீஞ்சாய் சட்டர்ஜியின் ட்வீட்
ஸ்ரீஞ்சாய் சட்டர்ஜியின் ட்வீட்

ஸ்கை நியூஸ் சேனலிடம் பேசிய குடியிருப்புவாசிகள் பலரும் ரமலான் காரணமாக கண்விழித்திருந்தவர்கள் “ஆபத்தில் உயிர் காக்கும்” பணியைச் செய்தார்கள் என்று கூறினார்கள்; சாலிஹா என்ற பெண்ணின் ட்விட்டர் பதிவும் இதனை உறுதி செய்கிறது.

சாலிஹாவின் ட்வீட்
சாலிஹாவின் ட்வீட்

ரமலானில் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதிகாலை உணவுக்காகவும் வழிபாட்டிற்காகவும் அதிகாலை 2 மணி அல்லது 2.30 மணி வரை விழித்திருந்ததால் நிறைய உயிர்களைக் காக்க முடிந்தது என்று ரஷிதா என்ற பெண்மணி ஸ்கை நியூஸிடம் கூறியுள்ளார். நதியா யூசுஃப் என்ற 29 வயது பெண் தாங்கள் அதிகாலை சஹர் உணவுக்காக எழுந்தபோது தீயைப் பார்த்து அக்கம்பக்கத்திலுள்ளவர்களை தங்களுடன் வெளியேற செய்ததாக கூறியுள்ளார். பல்வேறு மதத்தினரும் தேசத்தவரும் இனத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்த குடியிருப்பில் நடந்த இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை #stopthehate என்கிற ஹேஷ்டேக்குடன் பலரும் வெளியிட்டு வருகிறார்கள். லண்டன் மாநகர காவல் துறை 0800 0961 233 என்ற எண்ணில் தீயில் காணாமல் போன சொந்தங்களைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்தக் குடியிருப்பில் வசித்த பலரும் இப்போது உடுத்திய ஒரே துணியை மட்டும் கொண்டு சக மனிதர்களின் அன்பால் வாழ்வைப் புதிதாக தொடங்குகிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்