தீபாவளி லேகியம் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் என் அம்மாவும் பாட்டியும்தான் மனதில் வந்தார்கள்.
தீபாவளி வந்துவிட்டாலே எண்ணெய்ப் பலகாரங்கள் இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள், பெரியவர்கள் யாரையும் சாப்பிடுவதைக் கட்டுபடுத்த முடியாது. நாம் விரும்பிப் பலகாரங்கள் செய்வதே அவர்கள் சாப்பிடுவார்கள் என்றுதானே; எங்கள் வீட்டிலும் அதுபோலத்தான். அதனால் அம்மா எப்பொழுதும் தீபாவளி நேரம் என்றில்லாமல் மற்ற நேரங்களிலும் வீட்டில் லேகியம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் நாங்கள்தான் சாப்பிட அடம்பிடிப்போம். அது எவ்வளவு நல்லது என்று தெரியாமல் அம்மாவைக் கஷ்டப்படுத்துவோம். இஞ்சியின் காரம், பனை வெல்லத்தின் இனிப்பு எல்லாம் கலந்து இந்த லேகியம் ஒரு தனிச் சுவையுடன் இருக்கும். பண்டிகை தினங்களில் கையில் கிடைத்ததைத் தின்று வயிற்றைக் கெடுத்து வைத்திருப்போம். மந்தமாக இருக்கும் வயிற்றை இந்த லேகியம் குணமாக்கும். தினமும் ஒரு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் போதும்; எல்லோருடைய வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய இந்த லேகியம் செய்வதற்கான குறிப்புகளை உங்களுக்குக் கூறுகிறேன். கண்டிப்பாகச் செய்து பயனடையவும்.

தேவையான பொருட்கள்

பனை வெல்லம் – 500 கிராம்
நெய் – 100மில்லி
நல்லெண்ணெய் -100மில்லி
தேன் -50மில்லி

வறுத்துப் பொடிக்க

அரிசித்திப்பிலி -25கிராம்
கண்டதிப்பிலி -25கிராம்
மிளகு -25கிராம்
ஜீரகம் -25கிராம்
ஓமம் -20கிராம்
சுக்கு -50கிராம்
ஏலக்காய் -10
கொத்தமல்லி விதை -15 கிராம்

செய்முறை

வறுத்துப் பொடிக்க வேண்டிய எல்லாப் பொருட்களையும் தனித்தனியாகக் குறைந்த தீயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பனை வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும் .

கனமான வாணலியில் காய்ச்சிய பனை வெல்லத்தை ஊற்றி குறுக விடவும். குறுக ஆரம்பித்தவுடன்
பொடித்து வைத்ததைப் போடவும் அதில் நெய், தேன், எண்ணெய் போட்டுக் கிளறி உடனே இறக்கி விடவும்.

ஆறியதும் கையில் ஒட்டாமல் உருட்ட வரும். செரிமானத்திற்கு உகந்தது. தீபாவளியை லேகியத்துடன்
ஆரம்பியுங்கள்.

கடவுளென்னும் கடலைத் தேடி ஓடும் மதங்களென்னும் நதிகள்

பெருமாள் எப்படி வருவார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here