வரும் தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் ஷோலோவாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று படங்கள் போட்டிக்கு வந்துள்ளன.

தீபாவளிக்கு படம் வெளியாவதை முன்னணி நடிகர்கள் கௌரவமாகப் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை பண்டிகை தினம் என்பதால் பார்வையாளர்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமிருக்கும், போட்ட காசை எடுப்பதில் ரிஸ்க் குறைவு என நம்புகிறார்கள். வரும் தீபாவளிக்கு விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே ஆகியவை எதிர்பார்க்கப்பட்டன.

படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியது, திரையுலக வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் விஸ்வாசத்தின் வெளியீட்டை 2019 பொங்கலுக்கு தள்ளி வைத்தனர். திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் என்ஜிகே தீபாவளிக்கு வெளியாகாது என அறிவித்தனர். சர்கார் ஷோலோவாக வெளியாகும் என்ற நிலையில், ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி மட்டும் தீபாவளி ரிலீஸில் உறுதியாக இருந்தது. பில்லா பாண்டி சர்காருக்கு ஒரு போட்டியே அல்ல. ஆனால், தற்போது மேலும் இரு படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ளன.

கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திமிரு பிடிச்சவன் ஆகியவையே அந்தப் படங்கள்.

தீபாவளிக்கு சர்கார் படத்தை வெளியிடவே அதிக திரையரங்குகள் ஆர்வம் காட்டுகின்றன. குறைந்தது 500 திரையரங்குகளிலாவது சர்காரை வெளியிட சன் பிக்சர்ஸ் முயற்சிக்கும். அப்படி அதிக திரையரங்குகளில் சர்கார் வெளியானால் எனை நோக்கி பாயும் தோட்டா, திமிரு பிடிச்சவன் இரண்டில் ஒரு படத்துக்கு திரையரங்கு கிடைப்பது கேள்விக்குறியாகும். ஒருவேளை இரு படங்களேகூட சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தீபாவளி ரிலீஸ் முடிவை கைவிட நேரலாம். அந்தவகையில் சர்கார், பில்லா பாண்டி தவிர மற்ற இருபடங்களின் தீபாவளி ரிலீஸ் கடைசிநேர மாறுதலுக்கு உள்பட்டதே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்