அயோத்தியில் சரயூ நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் ராமர் சிலையை நிறுவ அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

‘ஒற்றுமையின் சிலை’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரமுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இதுபோலவே மும்பை அருகே கடலில் மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் பிரமாண்ட சிலை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், அயோத்தி மேயருமான ரிஷகேஷ் உபாத்யாயா கூறுகையில் ‘‘அயோத்தியில் சரயு நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ராமர் சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்க்கும் என உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிடப்படும்’’ எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here