தீபாவளி பண்டிகை: அரசுப் பேருந்து முன்பதிவு தொடக்கம்

0
115

தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை இன்று தொடங்குகிறது. 
தமிழகத்தின் தொலைதூர இடங்களுக்கு தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குளிர்சாதன வசதி, படுக்கை, இருக்கை வசதி கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்னரே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர், கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்குகிறது. 
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாள்களுக்கு முன் பயணச்சீட்டைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு வசதிகள் உள்ளடக்கிய பேருந்துகளை இணைத்து நவீனப்படுத்தி உள்ளோம். தற்போது தீபாவளி பண்டிகைக்காக  தென்மாவட்டங்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.  www.tnstc.in, www.redbus.in, www.paytm.com  ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம். தீபாவளிப் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கூட்ட நெரிசலைக் குறைப்பது குறித்தும் போக்குவரத்துக் காவலர்களிடம் கருத்துக் கேட்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ற பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.