இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். எனவே சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

இதையடுத்து, தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 11,367 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர நவம்பர் 3,4,5 தேதிகளில் தமிழகத்தின் மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தீபாவளி சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே செய்யும் பயணிகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தங்களுக்குப் பதிலாக ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. 

மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கேயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here