புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் கதையை உலகளாவிய அரங்கில் முன்வைத்திருக்கிறது தீபன். உலக மேடையில் ஒரு தமிழ் ஹீரோவும் இரு தமிழ் நாயகிகளும்.

தீபன்தான் ஷோபாசக்தி. ஷோபாசக்திதான் தீபன். உங்களது கதையே திரைக்கதையாகவும் நீங்களே தலைமைக் கதாபாத்திரமாகவும் அமைவது பெரும் வரம். இலங்கை இறுதிப் போரில் மாண்ட தீபனின் சகாக்கள் எரியூட்டப்படும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. உலகெங்கும் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உயிர் வாழ்தலுக்கான போர் இது. கணம்தோறும் தேர்வு செய்துகொண்டிருக்கும் இயற்கையுடன் இயைந்து செல்வதற்கான போர். இந்தப் போரை நல்லதொரு ஓட்டமென்று விவிலியப்படுத்தலாம். தர்மத்துக்கான யுத்தமென்று கீதைப்படுத்தலாம். நன்மைக்கான பந்தயமென்று குர்ஆனியமாக்கலாம். வலியதே வாழுமென்று டார்வினியமாக்கலாம். தீபன் திரைப்படம் வாழ்தலுக்கான வெறியை முன்வைக்கிறது. போர் அமைதியாக நிகழ்வதைப்போல தீபனும் எந்தச் சலனமும் இல்லாமல் போரைக் கடந்துசெல்கிறான். அவன் தொடர்ந்து தேர்வு செய்யப்படுகிறான். அப்படித்தான் அவன் தங்கப்பனைக்கும் தகுதி பெற்றான்.

போராளியாக அரசியல் தஞ்சம் கோர முடியாத உலக அரசியல் சூழலில் குடும்பமாக பிரான்சில் தஞ்சம் புகுகிறான் தீபன். யாழினியும் இளையாளும் அவனது புதிய சொந்தங்கள். யாழினி லண்டனிலுள்ள உறவுகளுடன் சேர்வதையே ஆசிக்கிறாள். ஆனால் சந்தர்ப்பச் சூழல். தீபனின் மனைவியாக நடிக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் போரில் அழிந்த இலங்கை  பூமியிலிருந்து அவள் தப்பிக்க முடிந்தது. இளையாள் ஆவணத்துக்கு மட்டுமே மகள். அவளோடு எந்த ஒட்டுமில்லை. உறவும் இல்லை. குடும்பமாக பாவனை செய்து தஞ்சம் பெறும் தீபனும் யாழினியும் இளையாளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக் கொள்கிறார்கள். உறவைக் கண்டடைகிறார்கள். அந்நியர்கள் உறவுகளாகும் இந்தப் பயணம் படம் முழுவதும் படிப்படியாக நிகழ்கிறது. இதனை மெல்ல மெல்ல நிகழ்த்துவதில்தான் திரைக்கதை வெற்றி பெறுகிறது.

பிரான்சில் குடியேறிய அடுக்ககத்தில் தீபனுக்குக் குடியிருப்புப் பராமரிப்பு வேலை கிடைக்கிறது. தபால்களைப் பிரிக்கும் வேலையை யாழினி செய்கிறாள். இளையாள் பள்ளிக்குச் செல்கிறாள். தபால்களைப் பிரிக்கும் பணிக்குப் போதுமான பிரெஞ்சு மொழி தெரியாமல் யாழினி சிரமப்படுகிறாள். குற்ற உணர்வு கொள்கிறாள். பின்னர் ஒரு வீட்டு வேலைக்குப் போகிறாள். அந்தக் குடியிருப்பைப் போதைப் பொருள் விற்பதற்குப் பயன்படுத்தும் ஒரு குற்றக் குழுவும் தீபனுக்குப் பழக்கமாகும் மற்றொரு குற்றக் குழுவும் துப்பாக்கிகளால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்தச் சண்டைகள் யாழினிக்குப் போரை நினைவூட்டுகின்றன. அவள் சொல்லாமல் கொள்ளாமல் லண்டனுக்குத் தப்பிச் செல்ல முயற்சிக்கிறாள். யாழினி தப்பிச் செல்வது அரிதாகக் கிடைத்த அரசியல் தஞ்சத்தை அபகரித்து விடலாம். அவளை ரயில் நிலையத்தில் தடுத்து வலுக்கட்டாயமாக திரும்ப அழைத்து வருகிறான் தீபன்.

குடியிருப்பில் குற்றக் குழுக்களின் சண்டை தீவிரமாகிறது. யாழினி வேலை செய்யும் வீடு, தீபனுக்கு எதிர் நிலையிலுள்ள குற்றக் குழுவின் தலைவனுடையது. தீபன் ஆதரிக்கும் குழு, தாக்குதலைத் தீவிரப்படுத்தும்போது எதிர்க்குழுத் தலைவனின் பிணைக் கைதியாகி விடுகிறாள் யாழினி. அப்போது தலைமறைவாக இருக்கும் தீபனை உதவிக்கு அழைக்கிறாள். ஹீரோ ஸ்டைலில் வந்து, இலங்கையில் கற்ற யுத்த உபாயங்களைப் பின்பற்றி, யாழினியைத் தீபன் மீட்டுச் செல்கிறான். இந்தக் கதாநாயகத் தருணம், இருவரையும் காதலில் பிணைக்கிறது. குழந்தையும் உண்டாகிறது. அவர்கள் பிறகெப்போதும் மகிழ்வான வாழ்வுக்குச் செல்கிறார்கள். தீபன் ஒரு திரைக் காவியம். தமிழுக்கும் பிரஞ்சுக்கும் மட்டுமல்ல, உலகத் திரைப்பட வரலாற்றில் முக்கியமானதொரு மைல் கல். யுத்தம் முடிந்த பிறகு அதன் நினைவுகளோடும் அதன் அறிவோடும் முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தின் ஆவணம்.

(நெட்ஃபிளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.)

நடிகர்கள்: ஷோபாசக்தி (எ) அந்தோனிதாசன் ஜேசுதாசன், காளீஸ்வரி சீனிவாசன், கிளாடின் வினாசைத்தம்பி, வின்சென்ட் ராட்டையர்ஸ்

இயக்கம்: ழாக் ஆடியார்ட்

ஆண்டு: 2015.

கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது வென்ற படம்.

The Raya Sarkar Interview

இறைநேசர்கள் எமது போராளிகள்

நாதமும் தாளமும் நீயானாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here