திரையரங்குகளைத் திறக்க திரையுலகினர் மீண்டும் கோரிக்கை

0
146

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி (ஆகஸ்ட்-14) இன்றுடன் 150 நாள்களாகின்றன. இதனால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் எனத் திரையுலகினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.

ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் அரசின் அறிவிப்பைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது. எனினும், பொருளாதார செயல்பாடுகள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

பிறகு, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி இன்றுடன் 150 நாள்களாகின்றன. இதனால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் எனத் திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி இன்றுடன் 150 நாள்களாகின்றன. இதற்கு முன்பு இதுபோல நடந்ததில்லை. உடற்பயிற்சிக் கூடங்கள் போல திரையரங்குகளையும் தமிழ்நாட்டில் திறக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திரைத்துறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here