திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், திருவாரூரில் திமுக வேட்பாளராக பூண்டி கே.கலைவாணன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மு.க.ஸ்டாலினிடம் பூண்டி கலைவாணன் வாழ்த்து பெற்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி திருவாரூர்.
கருணாநிதி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், கருணாநிதியின் பணிகளை பூண்டி கலைவாணனே கவனித்து வந்தார். திருவாரூர் மாவட்டச் செயலாளராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.

திமுகவுக்கு ஆதரவு: திருவாரூர் தொகுதியில் திமுகவுக்கு காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

அமமுக வேட்பாளர்: தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக எஸ்.காமராஜைஅக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காமராஜ் ஜனவரி 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின் அவர் வாக்கு சேகரிப்பார். நான் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜன. 17ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்வேன்.
மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி குறித்துப் பேசி வருவது உண்மைதான். ஆனால், இடைத்தேர்தலுக்காகக் கூட்டணி குறித்து பேசவில்லை. இல்லையென்றால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்போல தனித்துப் போட்டியிடுவோம்.
ஆர்.கே. நகர் வெற்றியைவிட, திருவாரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.
கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் குடவாசல் ராஜேந்திரன், கல்லூர் இ. வேலாயுதம், தலைமை நிலையச் செயலர்கள் பழனியப்பன், சி.ஆர். சரஸ்வதி, பொருளாளர் எம். ரெங்கசாமி, மகளிரணி செயலர் வளர்மதி, இளைஞரணி செயலர் டேவிட் அண்ணாதுரை, அம்மா பேரவைச் செயலர் மாரியப்பன் கென்னடி, கொள்கைப் பரப்புச் செயலர் தங்க தமிழ்ச்செல்வன், நடிகர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் விவரம்:
பெயர் : பூண்டி கே. கலைவாணன்.
கல்வித்தகுதி : ஐடிஐ.
பிறந்த தேதி : 4.4.1964.
பிறந்த ஊர் : கொரடாச்சேரி
மனைவி : சிந்தனை
குழந்தைகள்: கலை அமுதன் (19), கலை முகுந்தன் (16).
பெற்றோர் : கிருஷ்ணசாமி, நீலோத்தம்பாள்.
திமுகவில் பேரூராட்சி செயலாளராக பொறுப்பு வகித்தார். திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளராக செயல்பட்ட பூண்டி கலைச்செல்வம், கடந்த 2007-ஆம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது தம்பியான பூண்டி கே. கலைவாணன், கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுவில் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றினார். அத்துடன், மின்வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பருத்தி உற்பத்தியாளர் சங்க உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அமமுக வேட்பாளர் விவரம்:
பெயர்: எஸ். காமராஜ்.
கல்வித் தகுதி: எம்.காம். பிஎட்.,
பிறந்த தேதி: 27.2.1966.
பிறந்த ஊர்: எட அன்னவாசல், நீடாமங்கலம் ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.
மனைவி: கே. விஜயலெட்சுமி,
குழந்தைகள்: இரண்டு பெண், ஒரு ஆண்.
பெற்றோர்: சௌந்தரராஜன் – பேபியம்மாள்
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது, மன்னார்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு, தற்போது திருவாரூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளர் யார்?: இன்று தெரியும்
திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக, அமமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஆளும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் வெள்ளிக்கிழமை வரை அறிவிக்கப்படவில்லை.
இடைத் தேர்தலில் போட்டியிட 52 பேர் வரை விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
அவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் வேட்பாளரின் பெயர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, வெள்ளிக்கிழமை வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here