திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்: அய்யாக்கண்ணு

0
365

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy :Maalaimalar

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்