ஹதியா திருமணத்தை ரத்து செய்து பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. இவர், சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகளான ஃபஸீனா மற்றும் ஜெசீனா ஆகியோருடன் அகிலாவும் தங்கியிருந்தார். அப்போது அவர்களுடன் பழகியதில் அகிலாவுக்கும் இஸ்லாம் மீது ஈடுபாடு ஏற்பட்டு, இஸ்லாமிய வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து தனது பெயரையும் ஹதியா என மாற்றிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அவரின் தந்தை அசோகன், தனது மகளைக் காணவில்லை என்று உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினையும் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஹதியா, தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகத் தெரிவித்தார். மேலும் கடந்த மூன்று வருடங்களாக இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், சமீபத்தில்தான் முறைப்படி மதம் மாறியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அசோகன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதனைத்தொடர்ந்து ஆறு மாதம் கழித்து, அதாவது 2016ஆம் ஆண்டு ஆகஸ்டில், ஹதியா தந்தை அசோகன் மீண்டும் ஒரு ஆட்கொணர்வு மனுவினை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது மகளைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்துள்ளதாகவும், அவரை சிரியாவிற்கு கடத்தி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தநிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஷபின் ஜஹான் என்ற இளைஞரை ஹதியா திருமணம் செய்துகொண்டார். இதற்கு எதிராக ஹதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஷபின் ஜஹான் – ஹதியா திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திருமணம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, திருமணத்தை ரத்து செய்து கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹதியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தநிலையில், இடைக்கால ஏற்பாடாக ஹதியா தனது ஹோமியோபதி படிப்பைத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், இத்திருமணத்தில் ஏதேனும் சதியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை (மார்ச்.8) பிற்பகலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஹதியா – ஷபின் ஜஹான் திருமணம் செல்லும் என்றும், தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஹதியாவுக்கு உரிமையுண்டு என்றும் தெரிவித்துள்ளது.

ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு தனது விசாரணையைத் தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்