திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் அமமுக கட்சி போட்டியிடும் என அமமுக தலைவர் தினகரன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் (அதிமுக) உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதியும் காலியானதாக வெள்ளிக்கிழமை (ஆக.10) அறிவிக்கப்பட்டது. பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 89-இல் இருந்து 88-ஆக குறைந்துள்ளது.

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும்.

அதிமுக பேரவை உறுப்பினர்கள் 18 பேரை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளால் தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 20 இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் சென்னையில் , கழக நிர்வாகிகளுடன் நடத்திய
ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் , வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் அமமுக கட்சி போட்டியிடும்.

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை வைத்து வெற்றி பெறுவோம். சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து அறிவிப்போம்” என தினகரன் கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்