திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டியும் உறுப்பினர்

0
296

திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அவருக்கும், அந்தப் பதவியை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கியுள்ளார். தமிழக அரசு பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பதவி வழங்கப்படும்.

2016 டிசம்பர் 21-ஆம் தேதி அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை.  பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்ததும் பக்கம்பக்கமாக எழுதித் தீர்க்கப்பட்டன. அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோர் வீடுகளில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் சோதனை நடத்தினர். சென்னை, வேலூரில் பல் வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி, 178 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டன. இதில் ரூ.34 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுகள் ஆகும். இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

வங்கி அதிகாரிகளின் உதவியுடன் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர் புதிய ரூ.2000 நோட்டுகளை முறைகேடாகப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420, ஊழல் தடுப்பு சட்டம் 13(1), (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம்குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உட்பட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 5 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மார்ச் 20-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சார்பில் சேகர் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து10 மணி நேர விசார ணைக்கு பிறகு, சட்ட விரோதபண பரிவர்த்தனை தொடர்பாக சேகர் ரெட் டியை அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனர்.

6 மாதங்களுக்கு பின்னர் சேகர் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கப்பட்டது . அமலாக்கத் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் . சேகர் ரெட்டியின் ரூ.33 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன . 

சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையிலேயே சேகர் ரெட்டி மீது இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் ‘டைரி’. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.

ஒவ்வொரு முறை தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோதும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியின் ரகசிய டைரி குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக செய்தியில் கூறியது . அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது . 

பின்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ரூ33.89 கோடி புதிய (ரூ2000)  நோட்டுகள் எஸ் ஆர் எஸ் சுரங்கத் தொழில் மூலம் வந்த  வருவாய் என்று வருமான வரித்துறை அவருக்கு நற்சான்றிதழ் அளித்தது. 

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியின் மீது இன்னும் அமலாக்கத்துறை, சிபிஐயின் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, எப்படி திருப்பதி அறங்காவலர் குழுவில் இடம் பெற்றார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here