திருநங்கைகளை புறக்கணித்த தேசிய குடிமக்கள் பதிவேடு; வழக்கு பதிவு செய்த திருநங்கை நீதிபதி

0
176

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இதையடுத்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இந்தப் பட்டியலில், புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இதில் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி மக்களின் விவரங்கள், இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், பட்டியலிலிருந்து விடுபட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய முழுப் பட்டியல் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் அஸ்ஸாமி மொழிகளில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடிமக்கள் பதிவேட்டில் திருநங்கைகள் பிரிவு இல்லையென்று அஸ்ஸாமின் முதல் திருநங்கை நீதிபதி ஸ்வாதி பிதான் பாரௌ, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 2 ஆயிரம் திருநங்கைகள் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் யாரிடமும் 1971-க்கு முந்தைய சான்றிதழ்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த பட்டியலில் ஆண், பெண் என்ற பாலின குறிப்பீடு மட்டுமே உள்ளது மாறாக திருநங்கை என்ற குறிப்பீடு இடம்பெறவில்லை.

எனவே திருநங்கைகள் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்றால் ஆண் அல்லது பெண் என்ற குறியீட்டின் மூலம் தான் குறிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய முறையில் செயல்பட்டு எங்கள் மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.  


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here