திருநங்கைகளுக்குக் கிடைத்த வெற்றி: கிரேஸ் பானு

0
775

2013இல் முதல் முதலாக நானும் சுவப்னாவும் திருநருக்கான கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்களத்தில் இறங்க முடிவுசெய்தோம்; அப்பொழுது இந்தக் கோரிக்கையை திருநர் சமூக மக்கள் கேலியாகவும் கிண்டலாகவும்தான் பார்த்தார்கள் “நாமளே மக்கள் தொகையில் மிக மிக குறைவு; இதுல இடஒதுக்கீடு கேட்கிறதுலாம் ஓவர்” எனப் பேசிய அதே நாவுகள் இன்று அந்தக் கோரிக்கையை பேச வேண்டிய கட்டாயம் வந்தவுடன் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் சோர்ந்து போகாமல் சுவப்னா, கிரேஸ்பானு, செல்வி,சாரதா,செல்வம்,ஜொவின்,லிவிங்ஸ்மைல்வித்யா,அப்ரா,சாலமன்,சிவக்குமார்,ராகவராஜ்,ராஜசேகர்,ஜோ பிரிட்டோ,மாறன்,அருண்சோரி மற்றும் பல தோழர்களின் ஈடுபாட்டில் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன் வைத்தோம்.

1.கண்ணகிசிலை அருகே சாலை மறியல்
2.தமிழக அரசு தேர்வாணையம் முற்றுகை
3.தலைமைச்செயலக முற்றுகை
போன்ற போராட்ட வடிவில் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தோம். அதன் பின் கிரேஸ் பானு,சுவப்னா,லிவிங் ஸ்மைல் வித்யா,திருநம்பி செல்வம்,செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தோம்.

1.திருநர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர் என்று தனியாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
2.அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வு விண்ணப்பங்களில் திருநர்கள் தங்கள் பாலினத்தைக் குறிப்பிடும் வண்ணம் இடம்பெறவேண்டும்.
எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு
உப்பு சப்பில்லாத பல காரணங்களைக் கூறி இடஒதுக்கீடு வழங்க முடியாது எனக் கூறியது அந்தக் காரணங்கள் பின் வருவன:
1.தமிழகத்தில் மொத்தம் 3471 திருநங்கைகள் மட்டும்தான் இருக்கிறார்கள் (இது சுத்தப் பொய்)
2.திருநங்கைகளுக்கு தையல் மிசின், சுய உதவிக்குழு, கம்ப்யூட்டர், வீடு போன்ற நலத்திட்ட உதவிகள் செய்கிறோம்.
எனப் பல காரணங்களைக் கூறியது.
இதனையடுத்த இந்த வழக்கு கடந்த புதன் கிழமையன்று நீதிபதி சஞ்சய் கிஷன் கௌவுல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் திருநருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆறு மாதத்திற்குள் முடிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தீர்ப்புதான் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக இருக்குமென நான் கருதுகிறேன்; காரணம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்துவத்தை வழங்கினாலே அச்சமூகம் மேலெழுந்து வர உறுதுணையாக இருக்கும். பல அடிமைப்பட்ட சமூகங்கள் இட ஒதுக்கீடு என்ற ஒன்றால்தான் முன்னுக்கு வந்திரு க்கின்றன என்பது வரலாறு. அதேபோல் இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கினால்தான் இச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முழுமையான தீர்வாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்