திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 5.30 – 6 மணிக்குள் கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 5ஆம் திருநாளான செப்டம்பர் 3ஆம் தேதி மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருவர்.
செப். 4ஆம் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதியுலா, 5ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேருதல் நடைபெறும்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று, முற்பகல் 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்கிறார். 
9ஆம் திருநாளான செப். 7ஆம் தேதி இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருவர்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி – அம்மன் தேர்கள் வீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, அலுவலகக் கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.30945067690_0a9a35f210_b

நடைதிறப்பு நேரம்: ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை ஆகஸ்ட் 30, செப்டம்பர் 5 ஆகிய 2 நாள்கள் அதிகாலை 1 மணிக்கும், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, 9 ஆகிய 3 நாள்கள் அதிகாலை 4 மணிக்கும், மற்ற திருவிழா நாள்களில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

ஜூலை 27இல் சந்திர கிரகணம்: பூஜை நேரம் மாற்றம் 
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இம்மாதம் 27ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை, 5 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று, இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும். இரவு 10 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, 10.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையாகி, 10.50 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, நடைதிருக்காப்பிடப்படும். 
சனிக்கிழமை (ஜூலை 28) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என்றார் அவர்.

courtesy:dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்