திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய  சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

5ம் திருநாளான நேற்று வழக்கமான சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளியதும் மஹா தீபாராதனை நடந்தது. மாலை வேளையில் சுவாமி,  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அதைத்தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடந்தது. இருப்பினும் நேற்றும் வழக்கம்போல் தங்கதேர் வீதியுலா நடைபெறவில்லை.

கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து இன்று கோயில் அருகே கடற்கரை முகப்பு பகுதியிலேயே நடத்தப்பட்டது. முதலில்  சிங்கமுகனையும் அடுத்தது தாரகாசுரனையும், இறுதியாக சூரபத்மனையும் முருகப்பெருமான் வதம் செய்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு  பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here